விதவை கட்டாய பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!

8 November 2019, 8:06 pm
perambalur Rape Case-Updatenews360
Quick Share

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே விதவையை கட்டாய பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளம் பெண்ணிற்கு திருமணமான சில ஆண்டுகளில் கணவர் இறந்துவிட்டார். விதவையான அந்த பெண் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த நிலையில், வாலிகண்டபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(31) என்பவர், அந்த பெண் தனியாக சென்று கொண்டிருந்தபோது கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி மலர்விழி குற்றவாளியின் மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து மணிகண்டனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.