பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாதது என நிரூபணம்… இப்போ, பதவில் இருந்து விலகுவாரா ஸ்டாலின்…? ஓபிஎஸ் கேள்வி

Author: Babu Lakshmanan
11 February 2022, 8:06 pm
Quick Share

விசாரணைக் குழு அறிக்கையில் பொங்கல் பொருட்கள் தரமில்லாத பொருட்கள் என்பது தெரிய வந்துள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா? என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூரில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- கடந்த 10 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால் 10 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை. இப்படிப் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.

மாதம் ரூ. 1,000 தருவதாகக் கூறினீர்களே என உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேட்கின்றனர். இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என பதிலளிக்கிறார். நீட் தேர்வு ரத்து குறித்து கேட்டாலும், அதற்கும் நான்காண்டுகள் இருக்கிறது எனக் கூறுகிறார். இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் உறுதியாக வரும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய ஒரே ஆட்சி திமுக ஆட்சியாகத்தான் இருக்கும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 500 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியிருப்பது தெரிய வந்தது. இதற்காக ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா? அடுத்து வருகிற தேர்தலில் நாம் ஆட்சியில் அமர்வதற்கு அச்சாரமாக இந்தத் தேர்தல் உள்ளது. அதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது, என்றார்.

Views: - 864

0

0