10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 10:49 am
12th Exam - Updatenews360
Quick Share

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு குறித்த தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தாலும், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகளை, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.

அதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும், 97.95 விழுக்காடுகள் பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதலாகவும், 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 31,034 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு நடைபெறுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதாவது, 12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டு வருகிறது.

Views: - 424

0

0