ஒற்றைத் தலைமை போட்டியில் சரிந்து விழுந்தது OPS-ன் மனக்கோட்டை…! அடுத்த நகர்வு பாஜகவா..? திமுகவா..?

Author: Babu Lakshmanan
11 July 2022, 7:15 pm
Quick Share

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணமே ஓ பன்னீர்செல்வம்தான் என்பது அதிமுக தொண்டர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று. அதிமுக தலைமைக் கழகச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போல, ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வம் காட்டவில்லை.

தவிர தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கப் போவதில்லை என்ற விரக்தியில்தான் ஓபிஎஸ், தான் போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதி தவிர அவர் வேறு எங்குமே பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்பது அதிமுகவின் சாதாரண தொண்டர்களுக்கு பளிச்சென்று தெரிந்தது.

இதுதான் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது
என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இப்படி ஓபிஎஸ் மறைமுகமாக திமுக ஆட்சி அமைவதற்கு வழி வகுத்துக் கொடுத்து விட்டாரே என்ற கடும் கோபமும் அவர்களிடம் உள்ளது.

இது கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்களுக்கு தெரிய வந்தபோது ஓபிஎஸ்சிடம் மனக் குமறலுடன் மறைமுகமாக சுட்டிக்காட்டவும் செய்தனர். ஆனால் அதற்கு ஓபிஎஸ் பதிலே சொல்லவில்லை என்கின்றனர். இது ஏன் என்ற ஆதங்கம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் ஓபிஎஸ் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

மாறாக போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவருமான சசிகலாவின் பக்கமும், அவருடைய அக்காள் மகன் டிடிவி தினகரன் மீதும் அவருடைய பார்வை திரும்ப ஆரம்பித்தது.

அவர்கள் இருவரையும் அதிமுகவிற்குள் கொண்டு வந்தால்தான் கட்சிக்கு எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்ற யோசனையை ஓபிஎஸ் வலியுறுத்த ஆரம்பித்தார். யாருக்கு எதிராக 2017ல் ஜெயலலிதாவின் சமாதி முன்பாக அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினாரோ, அவர்களுக்கு ஆதரவாகவே ஓபிஎஸ் பச்சைக்கொடி காண்பித்தது அதிமுக தொண்டர்கள், அனுதாபிகளின் மனதை ஒரு உலுக்கு உலுக்கியது.

அதேபோல சட்டப்பேரவையில் அவர் பல்வேறு நிகழ்வுகளில் திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆதரவாக நடந்து கொண்ட விதமும்,
அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்பி ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்பு திமுக ஆட்சியை பாராட்டி பேசியதும் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. கட்சியில் செல்வாக்கு சரிந்து அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால் ஓபிஎஸ் இதுபோன்ற திடீர் நடவடிக்கைகளில் இறங்கியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில்தான் ஜூன் மாதம் 23-ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்கிற விவாதம் நடத்தப்படும் என்றும், ஓபிஎஸ்சுக்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் தகவல் வெளியானது. மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவார் என்ற பேச்சும் அடிபட்டது.

கட்சி ஒற்றை தலைமையை நோக்கி சென்றால் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று கருதிய ஓபிஎஸ் ஜூன் 23 பொதுக்குழுவில் ஏற்கனவே திட்டமிட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும், வேறு எதையும் விவாதிக்கக் கூடாது என்று கோரி தனது ஆதரவாளர்கள் மூலம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர வைத்தார். கடந்த மாதம் 22-ம் தேதி மாலை அந்த வழக்கை தீர விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள் கட்சி விவகாரங்களில் கோர்ட்டுகள் தலையிடுவதில்லை என்ற உத்தரவை இரவு 9.30 மணி அளவில் பிறப்பித்தார். இதனால் அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடப்பது உறுதியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் மேல்முறையீடு செய்தார். அந்த அமர்வு, ஜூன் 23 பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய தீர்மானம் குறித்து எந்த விவாதமும் நடத்தக் கூடாது என்று அதிகாலை 4 மணி அளவில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம் திட்டமிட்டபடி கூடிய அந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிசெய்யும் தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாதியிலேயே வெளியேறினர்.

என்றபோதிலும் அந்தக் கூட்டத்தில், கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக, தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் கையெழுத்து போட்டு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜூலை 11ம் தேதி, சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதை தடுப்பதற்கு நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை ஓபிஸ் தரப்பினர் மேற்கொண்டனர். அதில் அவர்களுக்கு சாதகமானதொரு தீர்ப்பும் கிடைத்தது.

இறுதியாக இந்த வழக்கு டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
அங்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு, கட்சி விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முடியாது, அவற்றை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ஏதாவது நிவாரணம் தேவை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

அதனடிப்படையில் ஓபிஎஸ் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். சட்ட விதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வாதங்களை அவருடைய வக்கீல்கள் முன் வைத்தனர். இரு தரப்பிலும் இரண்டு நாட்கள் விறுவிறு விவாதம் நடந்தது.

இந்த வழக்கில் இன்று காலை 9 மணிக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஆதரவு தெரிவிப்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது. பழைய, புதிய தீர்மானங்களை நிறைவேற்றலாம். அதில் சட்ட விதி மீறல்கள் ஏதாவது இருந்தால் கோர்ட்டில் நிவாரணம் கேட்கலாம் என்று தனது தீர்ப்பில் நீதிபதி கூறினார்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

இன்றைய தீர்ப்பின்படி பார்த்தால் ஓ பன்னீர் செல்வத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார். கட்சி விவகாரங்களில் கோர்ட்டு தலையிடுவது இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்த பின்பும் கூட நிவாரணம் பெறலாம் என்ற ஒரே கருத்தை மட்டுமே நம்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.

ஆனால் பொதுக்குழு நடந்து முடிந்த பின்னர்தான் அதில் சட்ட விதிமீறல் ஏதாவது இருந்தால் நிவாரணம் பெற முடியும் என்பதை ஓபிஎஸ் தரப்பினர் புரிந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் பொதுகுழுவுக்கு தடை விதித்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். நாளைக்கு எல்லா கட்சிகளிலும் அதேபோல் கிளம்பிவிடுவார்கள் என்ற நோக்கத்தில்தான் ஒரு கட்சியின் விவகாரங்களில் பொதுவாக நீதிமன்றம் தலையிடுவதில்லை. உங்களது பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற யோசனையை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தாலும் கூட அதற்கு பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அவர் உச்சநீதிமன்றம் வரை சென்றாலும்கூட இதில் வெற்றி பெற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். எனவே ஓபிஎஸ் இனி அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு விடுவார் என்பது உறுதி.
ஏனென்றால் அவருக்கு ஆதரவு வட்டம் மிகவும் சுருங்கி தரைமட்டமாகி விட்டது.

அரசியலில் 50 ஆண்டு கால அனுபவம் எனக்கு உண்டு என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும் ஓபிஎஸ் தனது ஓராண்டு தவறான நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினரிடமும் மதிப்பை அடியோடு இழந்துவிட்டார். அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தால் அவருக்கு தலைவர் பதவி கிடைக்கலாம். அல்லது சசிகலாவுடன் சேர்ந்து ஒரு புதிய கட்சியை தொடங்கலாம்.

ஏனென்றால் சசிகலாதான், அதிமுகவினர் என்னை மீண்டும் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்வார்கள் என்று தொடர்ந்து கூறிவருகிறார். இனி அது ஒரு காலத்திலும் நடக்காது என்பது தெரிந்து விட்டது. எனவே எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

திமுகவை எதிர்ப்பதற்காக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவை தொண்டர்களின் அதே மன உணர்வுகளின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி வலிமையுடன் நடத்திச் சென்று தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்வார் என நிச்சயமாக நம்பலாம்” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

Views: - 454

0

0