அதிமுக ஆபிசுக்குள் புகுந்த மழைநீர்… மிதக்கும் ரூ.4,000 கோடி… ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கும் திமுக ; அதிமுக விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 11:16 am
Quick Share

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெள்ளநீர் புகுந்த நிலையில், திமுக அரசு நிர்வாகத் தோல்வியையே சந்தித்திருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

அடித்து ஊற்றும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அநாவசியமாக பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளில் புகுந்துள்ள வெள்ளநீர் வாகனங்களை அடித்துச் செல்லும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புயல் காரணமாக சென்னை உருக்குலைந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதை தொடர்ந்து, திமுக அரசை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த இருபது ஆண்டு காலத்தில், பெரும் புயல்களை சந்தித்த போது கூட அதன் வாயில் வரைதான் வெள்ளநீர் வந்திருந்தது. ஆனால் இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தலைமை அலுவலகத்திற்கு உள்ளேயே வெள்ள நீர் வந்துவிட்டது.

ஒவ்வொரு முறையும் அதிமுகவை வெற்றி கொள்ள நினைத்து தோல்வியையே சந்தித்து வரும் திமுக அரசு, தலைமைக் கழகத்திற்குள் வெள்ளம் சூழ்ந்திருக்கும் விஷயத்திலும் தங்களின் நிர்வாகத்தோல்வியையே சந்தித்திருக்கிறது, எனப் பதிவிட்டதுடன், மிதக்கும் ரூ.4,000 கோடி என்ற ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளார்.

Views: - 233

0

0