கட்டுக்கடங்காமல் முடியை வளரச் செய்யும் மூலிகை ஹேர் ஆயில் வீட்டில் செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
2 May 2022, 3:05 pm
Quick Share

பொதுவாக அனைத்து பெண்களும் இருக்கும் ஒரே ஆசை தலை முடி கருமையாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்பது தான்.
இருந்தாலும் தலை முடி வளர வேண்டும் என்றால் , முடியை நன்றாக ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

முதலில் ஷாம்புவை அதிகமாக பயன்படுத்தக் கூடாது ஏன் என்றால் அதில் இருக்கும் ரசாயனப் பொருட்கள் உங்கள் முடியை அதிகமாக ‌உதிர வழிவகுக்கும். ஆகவே‌, இயற்கையாக கிடைக்கும் சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர:
முதலில் தலை‌ முடிக்கு பயன்படுத்த கூடிய எண்ணெய் தரமானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

ஆகவே, நாம் இன்று இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிமையாக மூலிகை எண்ணெய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
நல்லெண்ணெய் – 1/4 லிட்டர்
செம்பருத்திப்பூ – 20
மருதாணி இலை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கற்றாழை – 1(சிறியது)
நெல்லிக்காய் – 3(பெரியது சிறு துண்டுகளாக நறுக்கி ‌கொள்ளவும்)
மிளகு – 6
வெந்தயம் – 1டேபிள்ஸ்பூன்(ஊற வைத்தது)
விருப்ப பட்டால் வேப்பிலை பத்து சேர்த்து கொள்ளலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், காம்பு நீக்கப்பட்ட செம்பருத்திப்பூ, கறிவேப்பிலை, மருதாணி இலை, மிளகு, கற்றாழை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ‌இரும்பு வாணலியை வைத்து கலந்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். 20 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளற வேண்டும் .

எண்ணெயில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் ‌நன்றாக பொரிந்து மொறு மொறு வென்று இருக்க வேண்டும். பிறகு, அடுப்பை நிறுத்தி விட்டு எண்ணெயை நன்கு ஆற‌ விட வேண்டும்.

எண்ணெய் நன்கு ஆறியதும் ஒரு காட்டன் துணியால் வடிகட்டி எடுத்து , ஒரு பாட்டிலில் ‌ஊற்றிக்‌ கொள்ள வேண்டும். எண்ணெயை நன்றாக காய்ச்சினால் மட்டுமே ‌ஆறு மாதத்திற்கு எண்ணெய் கெடாமல் இருக்கும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது இந்த எண்ணெயை சூடாக்கி பயன்படுத்தலாம்.
இப்படி இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி ‌நம் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Views: - 4280

4

0