தொப்பி அணிந்தால் தலைமுடி கொட்டுமா… இதற்கு பின்னால் இருக்கும் உண்மை தான் என்ன???

3 February 2021, 9:53 pm
Quick Share

தொப்பி அணிந்தால் தலைமுடி கொட்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுக்கின்றனர். தொப்பி அணிவதற்கும், முடி கொட்டுவதற்கும் சம்மந்தமே இல்லை என கூறுகின்றனர். பலர் தங்களது அரைகுறையாக கொட்டிய முடி வெளியே தெரியாமல் இருக்க தொப்பி போடுகின்றனர். தொப்பி அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றனவே தவிர இதனால் தீங்கு ஏதும் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே தொப்பி அணிவதால் முடி கொட்டாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

மரபணு ரீதியான பிரச்சினை:

ஆண்கள் மற்றும் பெண்களில் மரபணு ரீதியான பிரச்சினை காரணமாக ஆண் சுரப்பியான டிஹைட்ரோ டெஸ்ட்ரோன்களால் முடி உதிர்தல் அதிகரிக்கிறது. தலைமுடி வளர செய்யப்படும் சிகிச்சைகளில் இந்த டிஹைட்ரோ டெஸ்ட்ரோன்கள் நிறுத்தப்பட்டு முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. 

மன அழுத்தம்:

இந்த நவீன உலகில் பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினை ஆகி விட்டது. குடும்ப சூழ்நிலை பல ஆண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகவே முடி வளர தேவையான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் முடி உதிர்கிறது. இதற்கு மன அழுத்தம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 

சிகை அலங்காரம்:

முன்பெல்லாம் பெண்கள் தான் பியூட்டி பார்லர் சென்று தங்களை அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் இன்றோ ஆண்களும் அதற்கு சமமாக பார்லர் சென்று பல வகையான சிகை அலங்காரங்களை செய்து கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் பல்வேறு இரசாயனங்கள் காரணமாக முடி உதிர்தல் ஏற்படுகிறது. தலைமுடிக்கு வண்ணம் பூசுவது, முடியை பிடுங்குவது போன்ற செயல்கள் முடி கொட்ட காரணமாகின்றன. 

இறுக்கமான தொப்பி அணிவதை தவிர்க்கவும்:  

தொப்பி அணிவதற்கும், முடி கொட்டுவதற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் கூட தொப்பி அணியும் போது நாம் ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தலையை அழுத்தும் இறுக்கமான தொப்பியை அணிய கூடாது. ஏனென்றால் இது நம் முடி வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

தரமற்ற தொப்பி:

தரம் இல்லாத, குறைந்த விலை தொப்பிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான துணியால் ஆன தொப்பியே உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. இல்லாமல் போனால் தலையில் அசௌகரியம், சொரி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இதுவே முடி கொட்டுவதற்கு காரணமாகி விடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் தொப்பி அணிவதால் தலையில் உண்டாகும் வியர்வை ஆகும். எனவே தொப்பி வாங்கும் போது கவனமாக இருங்கள். 

வியர்வை:

தொப்பி போட்டு கொள்ளும் போது தலையில் வியர்வை உண்டாகிறது. இதிலுள்ள உப்புத்தன்மை நமைச்சல் மற்றும் சொரி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக தலைமுடி கொட்டும். முடி உதிர்வதற்கு இவை ஒரு காரணமே தவிர தொப்பிக்கும் முடி கொட்டுவதற்கும் நேரடி சம்மந்தம் எதுவும் கிடையாது. 

நன்மைகள்:

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூரிய கதிர்களில் இருந்து வெளிப்படும் UV கதிர்களிடம் இருந்து தொப்பி பாதுகாக்கிறது. இதனால் தோல் நோய், புற்றுநோய் போன்றவை தடுக்கப்படுகின்றன. ஆகவே தொப்பி அணிவதால் ஏகப்பட்ட நன்மைகள் தான் கிடைக்கிறதே தவிர முடி கொட்டுவதற்கும் தொப்பி அணிவதற்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் நல்ல தரமான துணியினால் ஆன தொப்பிகளை பயன்படுத்துவது முக்கியம். 

Views: - 23

0

0