அடிக்கடி உடைந்து போகும் உயிரற்ற நகங்களை வலிமையாக்க சில டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
3 June 2023, 2:48 pm
Quick Share

ஆசை ஆசையாய் வளர்த்த நகம் நொடிப்பொழுதில் உடைந்து போகும் பொழுது யாருக்கு தான் வருத்தமாக இருக்காது. ஆனால் இதற்கு வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவது கிடையாது. சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது போலவே நகங்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் அவை எளிதில் உடையாது. அந்த வகையில் நகங்களின் ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்த ஒரு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக நமது கைவிரல்கள் மற்றும் கால் விரல்களின் நகங்களில் காணப்படும் கெரட்டின் என்ற புரத அடுக்கு வெளிப்புற சூழலில் இருந்து நகங்களை பாதுகாக்க கூடியது. நகங்களில் மட்டுமல்லாமல் தலைமுடி மற்றும் சருமத்திலும் கெரட்டின் காணப்படுகிறது. நகங்களில் போதுமான அளவு கெரட்டின் இல்லை என்றால் அவை எளிதில் உடைந்து போகக்கூடும். பின்வரும் குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் நகங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.

அடிக்கடி கைகளை கழுவுவது கிருமிகள் மற்றும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் கைகளை எப்பொழுதுமே ஈரப்பதமாக வைத்திருப்பது நகங்களுக்கு நல்லதல்ல. இதனால் நகங்கள் உடையக் கூடியதாகவும் வலிமை இழந்தும் காணப்படும். ஆகவே பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் பொழுது முடிந்த அளவு கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். இது உங்கள் நகங்களை பாதுகாப்பாக வைக்க உதவும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், நகங்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடித்தால் தான் உங்கள் நகங்களுக்கு போதுமான அளவு ஈரப்பதம் கிடைத்து அது எளிதில் உடைந்து போகாமல் இருக்கும். ஆகவே தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.

தண்ணீரைப் போலவே ஊட்டச்சத்துக்களும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உங்கள் நகங்களுக்கு முக்கியம். அனைத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் நகங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.

நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைப்பது பலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எப்பொழுதுமே நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு மறைப்பது அதற்கு நல்லதல்ல. உங்கள் நகங்களுக்கு போதுமான இடைவெளி கொடுத்து நெயில் பாலிஷ் பயன்படுத்துங்கள்.

பயோட்டின் என்பது வைட்டமின் H மற்றும் வைட்டமின் B7 சப்ளிமென்ட். மேலும் இது B வைட்டமினின் ஒரு பகுதியாகும். இது நீரில் கரையக்கூடியது என்பதால் இதனை உடலால் சேமித்து வைக்க முடியாது. ஆகவே இந்த ஊட்டச்சத்தை நீங்கள் தினந்தோறும் எடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தலை முடி, சருமம் மற்றும் நகங்களுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியம். மீன்கள், முட்டை, தானியங்களில் பயோட்டின் காணப்படுகிறது அல்லது ஒரு மருத்துவரை ஆலோசித்து பயோடின் சப்ளிமெண்ட்ஸ்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 298

0

0