ரிலையன்ஸ் நிறுவன தலைமையகத்தை ஜப்தி செய்த யெஸ் வங்கி..! கடனை திருப்பி செலுத்தாததால் அதிரடி நடவடிக்கை..!

30 July 2020, 2:43 pm
Reliance_HQ_UpdateNews360
Quick Share

2,892 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக, சர்பர்பன் சாண்டாக்ரூஸில் உள்ள அனில் அம்பானி குழுமத்தின் தலைமையகத்தை யெஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மும்பையில் இரண்டு பிளாட்களையும் கையகப்படுத்தியுள்ளதாக யெஸ் வங்கி நேற்று ஒரு செய்தித்தாளில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ஏ.டி.ஏ.ஜி) கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும் ‘ரிலையன்ஸ் சென்டர்’ எனப்படும் சாண்டாக்ரூஸ் அலுவலகத்திலிருந்து செயல்பட்டு வந்தன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், திவால்நிலைகள் மற்றும் பங்கு விற்பனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை சந்திக்கும் அனில் அம்பானிக்கு இது மற்றொரு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

மே 6’ம் தேதி ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் இருந்து ரூ 2,892.44 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க முயன்றதாகவும், அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குப் பிறகும் திருப்பிச் செலுத்தத் தவறியதால் ஜூலை 22 அன்று மூன்று சொத்துக்களையும் கையகப்படுத்தியதாகவும் யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, கடன்களை அடைப்பதற்கான பணத்தைத் திரட்டும் முயற்சியாக, ரிலையன்ஸ் நிறுவனம் அதே தலைமையகத்தை குத்தகைக்கு விட முயன்றது குறிப்பிடத்தக்கது. கையகப்படுத்தப்பட்ட மற்ற இரண்டு சொத்துக்கள் தென் மும்பையின் நாகின் மஹாலில் உள்ளன

முன்னதாக ஜூன் 23 அன்று, அனில் அம்பானி ரூ 6,000 கோடி கடன்களைக் கொண்ட ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் இந்த நிதியாண்டில் முற்றிலும் கடன் இல்லாததாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

2018’ஆம் ஆண்டில், நிறுவனம் தனது மும்பை எரிசக்தி வணிகத்தை அதானி டிரான்ஸ்மிஷனுக்கு கிட்டத்தட்ட ரூ 18,800 கோடிக்கு விற்றது, இது கடனை கிட்டத்தட்ட ரூ 7,500 கோடியாக குறைக்க உதவியது குறிப்பிடத்தக்கது.