கழுத்தை நெறிக்கும் கத்தரிக்காய்.! அழுகி போவதால் விவசாயிகள் கவலை.!!

19 June 2020, 7:33 pm
Brinjal Spoil - Updatenews360
Quick Share

தருமபுரி : ஊரடங்கு உத்தரவு காரணமாக கத்தரிக்காய் தொடர்ந்து விலை வீழ்ச்சியால் விவசாய நிலங்களில் பயிரிடபட்ட கத்தரிக்காய்கள் செடியிலேயே அழுகி நாசமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலே விவசாயம்.குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்காரெட்டிப்பட்டி பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளி, வெண்டை, தக்காளி போன்ற பயிர்களை விவசாயம் செய்து வந்தனர்.

காட்டு பன்றிகளின் தொல்லையால் மரவள்ளி, தக்காளி,வெண்டை விவசாயத்தையும் கைவிட்ட விவசாயிகள் பின்னர் கத்தரிக்காய் பயிரிட துவங்கினர் கத்தரிக்காய் பயிரிட்ட விவசாயிகள் நல்ல லாபத்தை கண்டு வந்த நிலையில் தற்போது அறுவடை செய்யும் தருவாயில் கொரானா வைரஸ் தொற்றால் 144 தடை உத்தரவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்கள் அறுவடைக்காலம் வந்தும் போக்குவரத்து தடையின் காரணமாக கத்தரிக்காய்களை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதனால் கத்தரிக்காய்கள் அறுவடை செய்ய இயலாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டது முக்காரெட்டிப்பட்டி பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்களை வியாபாரிகள் தோட்டதிற்க்கே வந்து கத்தரிக்காய்களை பறித்து வியாபாரத்திற்கு கொண்டு செல்வார்கள்.

ஆனால்‌ போக்குவரத்து தடை காரணமாக கத்தரிக்காய் பறிக்க இயலாமல் தோட்டத்திலேயே அழுகும் நிலையில் உள்ளது இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது ஆனால் அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கத்தரிக்காய் பயிரிட்ட விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கொரோனா நோய் எதிரொலி காரணமாக விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் உள்ளனர்.

தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாயிகள் நிலைமை மோசமாகும் என்றும் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.