பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..! எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ரிலீஃப்..! வாராக்கடன் முறையில் திருத்தம் செய்யும் மத்திய அரசு..?

11 January 2021, 11:08 am
Mohali_ohri_indutries_updateNews360
Quick Share

மத்திய பட்ஜெட் 2021-22’க்கு முன்னதாக, உரிய காலத்தில் கடன் தொகை செலுத்தப்படாமல் போனால் சொத்துக்களை என்பிஏ எனும் வாராக்கடனாக அறிவிக்கும் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது கொரோனா காலத்தில் கடும் இழப்பைச் சந்தித்துள்ள தொழில் நிறுவனங்கள் குறிப்பாக சிறு வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது, ரிசர்வ் வங்கி வழங்கிய கொரோனா கால தடைக்கு தகுதியுள்ள கணக்குகளைத் தவிர்த்து, அசல், வட்டி அல்லது தவணை 90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால், அது என்பிஏவாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில் இந்த காலத்தை 120-180 நாட்களுக்கு மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் தொற்றுநோய் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு ஆகியவற்றின் போது ஏற்பட்ட இழப்புக்கு இது ஒரு நிவாரணமாக இருக்கும் என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இதுபோன்ற நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் தேவைப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

“இந்த விஷயத்தில் தொழில் மற்றும் பங்குதாரர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். அது வரவிருக்கும் பட்ஜெட்டில் கூட அறிவிக்கப்படலாம்.” என்று அந்த அதிகாரி கூறினார்.

பட்ஜெட் வெளியிடப்படும் போது, இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான நோக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. என்பிஏ’க்களுக்கான தற்போதைய 90 நாட்கள் காலக்கெடுவை மாற்ற தற்போதுள்ள வங்கி ஒழுங்குமுறைச் சட்டதை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி மசோதா மூலம் திருத்தப்படலாம் அல்லது பின்னர் தனித்தனியாக திருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 நாள் சொத்து வகைப்பாடு விதிக்கு 2017 ஆம் ஆண்டில் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மூலம் சட்டப்பூர்வ உறுதித்தன்மை வழங்கப்பட்டது. இது வங்கி நடவடிக்கைகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் ஒரு பகுதியாகும்.

இதுபோன்ற நடவடிக்கை வணிகங்களுக்கும் வங்கிகளுக்கும் பயனளிக்கும் என்று பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் நம்புகின்றனர். வணிகங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக கொரோனா காரணமாக, இது நிச்சயமாக அவர்களுக்கு வட்டி செலுத்த கூடுதல் நேரத்தை வழங்கும். மேலும் வாராக்கடன் என்று அறிவிக்கப்படாது.

“மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் மாறுபட்ட வணிக கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இங்கே இவ்வளவு வணிகங்கள் கடன் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஒரு சிறு வணிக உரிமையாளர் எந்தவொரு தவறும் இல்லாமல் என்பிஏ’வாக அறிவிக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

வங்கிகளைப் பொறுத்தவரை, கொரோனா தொடர்பான தடைக்காலம் முடிந்ததும் அவற்றின் வாராக்கடன் பட்டியல் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள இந்த மாற்றத்தை நிரந்தரமாக்குவது, கொரோனா காலம் மட்டுமல்லாமல் இயல்பான காலங்களில் கூட வங்கிகளின் மூலதன விகிதங்களை சரியாக பராமரிக்க உதவும் என்று மத்திய அரசு கருதுகிறது.