டிக்டாக்கின் இந்திய செயல்பாடுகளை வாங்கும் ரிலையன்ஸ்..? ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் பைட் டான்ஸ்..!

13 August 2020, 1:17 pm
tiktok_updatenews360
Quick Share

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்), தற்போதைய சூழலில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கின் இந்தியா நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியத்தை மதிப்பிடுவதற்கான முதன்மை கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிர்ணயித்த செப்டம்பர் 15 காலக்கெடுவுக்கு முன்னர் டிக்டாக்கின் உலகளாவிய செயல்பாடுகளில் ஒரு கட்டுப்பாட்டு பங்கை வாங்குவதற்கான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தையின் பின்னணியில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அண்மையில், டிக்டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர், டிக்டாக் இந்தியா பிரிவில் ஒரு பங்கை ரிலையன்ஸ் வாங்க ஆர்வமாக உள்ளதா என்பதை அறிய மூத்த ஆர்ஐஎல் நிர்வாகிகளை அணுகியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த கட்டத்தில் ஏதேனும் முதலீடு அல்லது கையகப்படுத்தல் பயனுள்ளதாக இருக்குமா என ஆர்ஐஎல் மற்றும் அதன் டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் கார்ப்பரேட் மேம்பாடு, மூலோபாயம் மற்றும் எம் அண்ட் ஏ குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என இந்த விவகாரத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர். “இரு தரப்பினரும் இதை விவாதிக்க நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர்” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஊகம் மற்றும் வதந்திகள் என்று கூறப்படும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஆர்ஐஎல் மறுத்துவிட்டது. “எங்கள் நிறுவனம் பல்வேறு வாய்ப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது. செபி விதிகளின் கீழ் எங்கள் கடமைகள் மற்றும் பங்குச் சந்தைகளுடனான எங்கள் ஒப்பந்தங்களுக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செய்துள்ளோம்.” என்று ஆர்ஐஎல் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விவாதங்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் பல தடைகள் இருப்பதால் பரிவர்த்தனை செயல்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. சென்சார் டவர் தரவுகளின்படி, இந்தியா 650 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட டிக்டாக்கின் மிகப்பெரிய சந்தையாகும்.

டிக்டாக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ், பாதுகாப்பு கவலைகள் மற்றும் தரவு பகிர்வு நடைமுறைகள் குறித்து உலகளாவிய அரசியல் அழுத்தத்தின் கீழ் உள்ளது. ஜூன் மாதத்தில், டிக்டாக் உள்ளிட்ட சீன தொடர்பு உள்ள 59 செயலிகளை இந்தியா தடை செய்தது. நாட்டின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை சுட்டிக்காட்டி. இந்தியாவில் செயலியின் 200 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை இந்த தடை பாதித்துள்ளது.

இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள், டிக்டாக்கின் வணிகம் சுமார் 2.5-5 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெறலாம் எனவும் தற்போதைய நெருக்கடிகளால் இதன் மதிப்பு குறைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

தற்போது உலக அளவில் இந்த கட்டத்தில் டிக்டாக்கின் மதிப்பீடு மேலும் குறையும் வரை ஆர்ஐஎல் காத்திருக்கக்கூடும். பின்னர் ஒரு சீன பிராண்டை மீட்பதை விட மூலோபாய ரீதியாக முடிவு செய்யலாம் என ஆர்ஐஎல்லுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிக்டாக் வாங்குவது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், மற்றொரு இந்திய நிறுவனமான சஞ்சீவ் கோயங்கா குழுமமும் டிக்டாக்கை வாங்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 2

0

0