இந்த மூன்று விமான நிலையங்களும் தனியார்மயம்..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

19 August 2020, 4:34 pm
Prakash_Javadekar_Updatenews360
Quick Share

ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) மூன்று விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டு மூலம் குத்தகைக்கு விடப்படும் என்று அறிவித்தார்.

மோடி அரசாங்கத்தின் கீழ் தனியார்மயமாக்கப்பட்ட முதல் சுற்றில், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரி மூலம் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரு வெபினாரில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “மேலும் அதிகமான விமான நிலையங்களை தனியார்மயமாக்க நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் 2030’க்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கபட உள்ளன” எனத் தெரிவித்தார்.

இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையம், நாடு முழுவதும் 100’க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாக வைத்து நிர்வகிக்கிறது. 2018 ஆம் ஆண்டில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்தது.

பிப்ரவரி 2019’இல் ஒரு ஏல நடைமுறை செயல்பாட்டுக்கு வந்த பிறகு லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், மற்றும் குவாஹாத்தி உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை இயக்கும் உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் வென்றது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சிஅமிர்தசரஸில் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்க விமான நிலைய ஆணையம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 36

0

0