1000 கோடி ரூபாய் ஹவாலா பணம்..! சீன நிறுவனங்களின் திட்டமிட்ட சதி..! வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்..!

12 August 2020, 1:59 pm
tax_evadores_updatenews360
Quick Share

ரூ 1,000 கோடி மதிப்புள்ள பணமோசடியை நடத்தியதற்காக சில சீன நபர்கள் மற்றும் அவர்களது இந்தியா கூட்டாளிகளின் வளாகங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

“சீன நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று, இந்தியாவில் சில்லறை ஷோரூம்களின் வணிகங்களைத் தொடங்க ஷெல் நிறுவனங்களிலிருந்து ரூ 100 கோடியை போலியாக முன்கூட்டியே எடுத்துள்ளன” என்று நேரடி வரிகள் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லி, காசியாபாத் மற்றும் குருகிராம் பகுதிகளை மையமாகக் கொண்ட மொத்தம் 21 நிறுவனங்களில் வருமான வரித்துறை மோசடிகள் குறித்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்கள் பணமோசடி நடவடிக்கைகளைச் செய்வதற்கு ஷெல் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

“சில சீன தனிநபர்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளும் தொடர்ச்சியான ஷெல் நிறுவனங்களின் மூலம் பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான தகவலின் அடிப்படையில், இந்த சீன நிறுவனங்களின் பல்வேறு வளாகங்களில் மற்றும் இரண்டு வங்கி ஊழியர்கள் உட்பட அவர்களின் நெருங்கிய கூட்டாளிகள் இல்லங்களில் வரி தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என சிபிடிடி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன தனிநபர்களின் உத்தரவின் பேரில், பல்வேறு போலி நிறுவனங்களில் 40’க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, இந்த காலகட்டத்தில் 1000 கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை மறைத்து கணக்கு காட்டிய வங்கி ஊழியர்கள் மற்றும் பட்டய கணக்காளர்களின் நடவடிக்கைகளும் இந்த தேடல் நடவடிக்கையின் விளைவாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஹவாலா பரிவர்த்தனைகளின் சான்றுகளும் இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன என்று சிபிடிடி மேலும் தெரிவித்துள்ளது.