பல வருட காத்திருப்புக்கு முடிவு..! இந்தியாவுக்குள் நுழைந்தது டெஸ்லா..! பெங்களூரில் நிறுவனம் தொடக்கம்..!

13 January 2021, 3:12 pm
Tesla_UpdateNews360
Quick Share

பல வருட காத்திருப்பு மற்றும் ஊகங்களை முடிவுக்குக் கொண்டு வந்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், இறுதியாக டெஸ்லாவை பெங்களூருவில் ஒரு நிறுவனமாக பதிவு செய்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.

நிறுவன பதிவாளர் இணையதளத்தில் கிடைக்கும் விவரங்களின்படி, டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் பெங்களூரின் லாவெல் சாலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“டெஸ்லா தனது இந்திய துணை நிறுவனத்தை ஜனவரி 8’ஆம் தேதி பெங்களூரில் உள்ள நிறுவன பதிவாளரிடம் பதிவு செய்தது. ரூ 15 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் ரூ 1 லட்சம் பணம் செலுத்தும் மூலதனத்துடன், டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி லிமிடெட் நகர மையத்தில் திறக்கப்பட்டுள்ளது. விபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகியோர் அதன் இயக்குநர்களாக உள்ளனர்.” என்று நிறுவனம், பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

தனேஜா டெஸ்லாவின் தலைமை கணக்கியல் அதிகாரியாகவும், ஃபென்ஸ்டீன் டெஸ்லாவில் உலகளாவிய வர்த்தக மற்றும் புதிய சந்தைகளின் மூத்த இயக்குநராகவும் உள்ளார். ஸ்ரீராம் ஏப்ரல் 2014 முதல் செனான் ஆட்டோமோட்டிவ் இந்தியா லிமிடெட் மற்றும் ஆகஸ்ட் 2020 முதல் கிளியர்கோட் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் ஆகியவற்றில் இயக்குநராக உள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா டெஸ்லாவை மாநிலத்திற்கு அழைக்க கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு சாதித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மையத்தை பெங்களூரில் கட்டமைத்து வருவதாவும், விரைவில் இது செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பசுமை இயக்கம் நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் பெங்களூருவில் ஆர் அண்ட் டி பிரிவுடன் இந்தியாவில் தனது செயல்பாட்டை தொடங்க உள்ளது. நான் எலோன்முஸ்கை இந்தியா மற்றும் கர்நாடகாவுக்கு வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள்.” என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.

டெஸ்லா தனது இந்தியா நடவடிக்கைகளைத் தொடங்க மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற பிற மாநில அரசுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

டெஸ்லா 2021’ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் பின்னர் நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்வது மற்றும் உற்பத்தி செய்வது குறித்து முடிவு செய்யும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிடமிருந்து கடந்த வாரம் 195 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மிகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தட்டிப்பறித்த எலான் மஸ்க், கடந்த அக்டோபரில் இறுதியாக அடுத்த ஆண்டு இந்தியா சந்தையில் நுழைய தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சாலைகளில் இயங்கும் மின்சார வாகனங்களின் விகிதத்தை கணிசமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை இந்தியா அதிகரித்து வரும் நேரத்தில் டெஸ்லாவின் நுழைவு வருகிறது. மின்சார வாகனங்கள் தவிர, அமெரிக்காவை தளமாகக் கொண்ட தூய்மையான எரிசக்தி நிறுவனத்தைக் கொண்டுள்ள டெஸ்லா, பேட்டரி சேமிப்பை வீட்டிலிருந்து கட்டம் அளவு, சோலார் பேனல்கள் மற்றும் சூரிய கூரை ஓடுகள் வரை செய்கிறது.

இந்த தொழில்நுட்ப மையத்தில் தனது ஆராய்ச்சி மையத்தை திறப்பதற்காக டெஸ்லா அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் ஆர் அன்ட் டி பிரிவு அமெரிக்காவிற்கு வெளியே டெஸ்லாவின் இரண்டாவது ஆராய்ச்சி மையமாகும். இதுபோன்ற முதல் வெளிநாட்டு மையம் ஷாங்காயில் உள்ளது. அங்கு மின்சார கார்களை உருவாக்க ஜிகாஃபாக்டரி உள்ளது.

தொழில்நுட்ப ஆர்வலரான கர்நாடகா, மின்சார வாகனத் துறையில் முதலீடுகளை ஈர்க்க மின்சார வாகனக் கொள்கையைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாகும். ஓலா எலக்ட்ரிக், சப் மொபிலிட்டி மற்றும் ஏதர் போன்ற நிறுவனங்கள் பெங்களூரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply