தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

2 March 2021, 1:25 pm
GST_Collection_UpdateNews360
Quick Share

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் உயர்ந்து ரூ 1.13 லட்சம் கோடியாக உள்ளது, இது பொருளாதார மீட்சியைக் குறிக்கிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஜனவரி மாதத்தில் ரூ 1.19 லட்சம் கோடி ரூபாயையும், டிசம்பரில் ரூ 1.15 லட்சம் கோடியையும் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜிஎஸ்டி வருவாய் ரூ 1.05 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த ஐந்து மாதங்களில் ஜிஎஸ்டி வருவாயை மீட்டெடுக்கும் போக்குக்கு ஏற்ப, பிப்ரவரி 2021 மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 7 சதவீதம் அதிகம்.

பிப்ரவரி மாதத்தில், பொருட்களின் இறக்குமதியிலிருந்து வருவாய் 15 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த மூலங்களிலிருந்து கிடைத்த வருவாயை விட 5 சதவீதம் அதிகமாகும்” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது மற்றும் தொற்றுநோய்க்கு பிந்தைய மூன்றாவது மாதமாக ரூ 1.1 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம், இது பொருளாதார மீட்சி மற்றும் வரி நிர்வாகத்தால் இணக்கத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கம் பற்றிய தெளிவான அறிகுறியாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் நாடு தழுவிய ஊரடங்கை கடந்த ஆண்டு விதித்த பின்னர், பொருளாதார நடவடிக்கைகளின் நிலையை நேரடியாக பிரதிபலிக்கும் ஜிஎஸ்டி வசூல், ஏப்ரல் 2020’இல், 32,172 கோடி ரூபாயாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வருவாய் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நிதி அமைச்சகம் அக்டோபர் முதல் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை வெளியிட்டுள்ளது.

Views: - 17

0

0