எதிர்பார்த்ததை விட வேகமாக பழைய நிலைக்குத் திரும்பும் இந்திய பொருளாதாரம்..! ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு கணிப்பு..!

15 November 2020, 1:04 pm
Cash_UpdateNews360
Quick Share

இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாக உலகளாவிய முன்கணிப்பு நிறுவனமான ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டிசம்பர் பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

“நுகர்வோர் பணவீக்கம் அக்டோபரில் கொரோனா வைரஸுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலையை விட உச்சநிலைக்கு சென்றது. எரிபொருளைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் விலைவாசி உயர்வை அனுபவித்து வருகின்றன. நான்காம் காலாண்டில் பணவீக்கத்தின் உச்சத்தை குறிக்கும் அதே வேளையில், 2021’ஆம் ஆண்டிற்கான பாதையில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் முட்டைகள் விலையுயர்வு சில்லறை பணவீக்கத்தை அக்டோபரில் ஏறக்குறைய ஆறரை ஆண்டு உயர்வான 7.61 சதவீதமாக உயர்த்தியது. இது ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கு ஏற்றவாறு இருந்தது. முன்னதாக 2020 செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.27 சதவீதமாக இருந்தது.

“அதே சமயம், பொருளாதாரம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வரக்கூடும் என்று வலுவான கீழ்நிலை செயல்பாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரிசர்வ் வங்கியின் தளர்வுகள் முடிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன” என்று ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் முடங்கினாலும், பல பன்னாட்டு பொருளாதார அமைப்புகள், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளால், இந்திய பொருளாதாரம் விரைவில் பழைய நிலையை எட்டும் எனக் கூறி வருவது இந்திய தொழில்துறைக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 22

0

0

1 thought on “எதிர்பார்த்ததை விட வேகமாக பழைய நிலைக்குத் திரும்பும் இந்திய பொருளாதாரம்..! ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு கணிப்பு..!

Comments are closed.