விவசாயிகளின் கழுத்தை அறுத்த கத்திரிக்காய்.! ஏரியில் கொட்டிய அவலம்.!

5 May 2020, 4:25 pm
Brinjal WAste- Updatenews360
Quick Share

தருமபுரி :அரூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கத்திரிக்காய் மார்கெட்டில் விலை போகாததால் கத்திரிக்காயை விவசாயிகள் ஏரியில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி வள்ளி மதுரை வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி கத்திரிக்காய் சுரைக்காய் புடலங்காய் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் வள்ளி, மதுரை, சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில் நாட்டு கத்தரிக்காயை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய் அறுவடை செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி 500-க்கும் மேற்பட்டோரை தாக்கியதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அரூர் அடுத்த வள்ளி, மதுரை, சித்தேரி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய் தற்போது அறுவடை செய்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனாலும் விவசாயிகள் கத்திரிக்காயை அறுவடை செய்து அருகில் உள்ள அரூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர்.

அரூர் பகுதியில் நாட்டு கத்தரிக்காய் விலை போதிய விலை இல்லாததால் விவசாயிகளிடம் அடிமட்ட விலைக்கு வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கத்திரிக்காயை அறுவடை செய்து வாடகை கொடுத்து வண்டிகளில் ஏற்றி வந்து போதிய விலை கிடைக்காததால் மனமுடைந்த விவசாயிகள் சுமார் ஒரு டன் கத்திரிக்காயை டிராக்டரில் ஏற்றி வந்து அரூர் பெரிய ஏரியில் கொட்டினார்.

மேலும் இந்த கத்திரிக்காய் சாகுபடி செய்து பராமரிப்பு அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது விலை இல்லாததால் கத்திரிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சுமார் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இந்த கத்திரிக்காய்களை வெளி மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு உரிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தற்பொழுது இழப்பு ஏற்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முறையாக ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் போதிய விலை கிடைக்காததால் அரூர் பெரிய ஏரியில் விவசாயிகள் கத்திரிக்காயை கொட்டியதை அறிந்த அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து மூட்டை மூட்டையாக கத்திரிக்காயை அள்ளிச் சென்றனர். அரூர் பகுதியில் போதிய விலை கிடைக்கவில்லை என கூறி விவசாயிகள் கத்திரிக்காயை ஏரியில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.