வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டெண்டர் ரத்து..! சீன நிறுவனம் முதன்மையாக உருவெடுத்ததால் ரயில்வே அதிரடி..!

22 August 2020, 5:33 pm
railways_updatenews360
Quick Share

டெண்டரில் முதன்மை நிறுவனமாக சீன நிறுவனம் உருவெடுத்ததால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’க்காக 44 ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டரை இந்தியன் ரயில்வே அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியாவை மையமாகக் கொண்டு ஒரு வார காலத்திற்குள் புதிய டெண்டர் வெளியிடப்படும் எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த மாதம், டெண்டர் திறக்கப்பட்டபோது, ​​சீன கூட்டு நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி எலக்ட்ரிக் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் 44 ரயிலுக்கு மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கான ஆறு போட்டியாளர்களில் ஒரே வெளிநாட்டு நிறுவனமாக உருவெடுத்தது.

சென்னையை தளமாகக் கொண்ட ஐ.சி.எஃப், வந்தே பாரத் எஸ்பிரஸுக்கான மின்சார இழுவை கருவிகளை வாங்குவதற்கான ஏலங்களை கோரியிருந்தது. இது என்ஜின்கள் இல்லாத நாட்டின் முதல் சுய இயக்க ரயிலாகும்.

வந்தே பாரத் எஸ்பிரஸை இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஐ.சி.எஃப் நிறுவனம் 80 சதவீத உள்நாட்டு பொருட்களுடன் தயாரித்தது மற்றும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 2018’இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

முதன்முதலில் புதுடெல்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி இடையே கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபரில் புதுடெல்லி மற்றும் கத்ரா இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் 2019’இல், செமி அதிவேக ரயில்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் ஐ.சி.எஃப். நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தது. இதனையடுத்து, 44 ரயில்களுக்கு மின்சார இழுவை கருவிகளை வாங்குவதற்கான டெண்டர்களை ஐ.சி.எஃப் கோரியது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவின் 75’வது சுதந்திர தினத்தன்று மேலும் 44 புதிய ரயில்களின் உற்பத்தியை முடிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டிருந்தது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அனைத்து கோச்களும் ஒரு துருப்பிடிக்காத ஸ்டீல் பாடியைக் கொண்டுள்ளது. மேலும் அவை தானியங்கி கதவுகளுடன், ரயில் கட்டுப்பாட்டுக்கான உள் கணினிகள் மற்றும் தொலைநிலை கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

கோச்களுக்கு ஜி.பி.எஸ் அடிப்படையிலான ஆடியோ காட்சி பயணிகள் தகவல் அமைப்பு, ஆன்-போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை மற்றும் வசதியான இருக்கை ஏற்பாடுகள் உள்ளன.

முன்னதாக, லடாக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதிக்கொண்டதை அடுத்து, ​​ரயில்வே கொரோனா கண்காணிப்பிற்கான தெர்மல் கேமராக்களுக்கான டெண்டரை, சீன நிறுவனத்திற்கு சாதகமாக இருந்ததால் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 50

0

0