சம்பங்கி விற்பனை இல்லாததால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்.!!

1 May 2020, 1:31 pm
Flower Waster - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கி பூக்கள் விற்பனையாகாததால் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிக்கரசம்பாளையம், இராமபைலூர், கணபதிநகர், பூதிகுட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், மைசூரு, பெங்களூரு, கேரளா, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர். வழக்கமாக கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனையான சம்பங்கிப்பூ தற்போது 10 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் வரை காரமடையில் உள்ள தனியார் வாசனை திரவிய ஆலை ஒன்று பூக்களை கிலோ 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது ஆலை செயல்படாததால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் வேதனை அடைந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை பறித்த சம்பங்கி பூக்களை பண்ணாரி சாலையில் கொட்டி சென்றனர். மேலும் மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.