மறுபடியும் முதல்ல இருந்தா? 2020ஐ போல மாறும் சீனா : கொரோனா உச்சத்தால் கடும் கட்டுப்பாடுகள்.. கொதித்தெழுந்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 7:28 pm
China Corona - Updatenews360
Quick Share

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வரைஸ் அடுத்த சில வாரங்களில் உலக நாடுகளில் காட்டுத்தீ போல பரவியது.

தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் விலை கொடுக்க நேரிட்டது. பொதுமுடக்கம், சமூக இடைவெளி என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பரவலை ஓரளவு குறைத்தது. இருந்தாலும் தடுப்பூசி வந்த பிறகே நோய்த்தொற்றின் தீவிரம் சற்று குறையத் தொடங்கியது.

உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்த சமயத்தில், இந்த நோய்தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் பாதிப்பு நூற்றுக்கணக்கில் தான் இருந்தது.

இது பல நாடுகளுக்கும் வியப்பை கொடுப்பதாகவே இருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஜிரோகோவிட் பாலிசியை கொண்டு வந்த சீனா கட்டுப்படுத்தியது.

ஆனால், இப்போது உலக அளவில் பெருமளவு கொரோனா தொற்று குறைந்துவிட்டது. ஆனால், புறப்பட்ட இடத்திற்கே கொரோனா திரும்பியிருக்கிறது. கொரோனா பிற நாடுகளில் எல்லாம் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகும் போது நூற்றுக்கும் குறைவாக பதிவாகி வந்த சீனாவில் தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி அதிர வைத்து வருகிறது.

சீனாவில் மீண்டும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், சீன மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில், கொரோனா கவச உடைகளுடன் மக்கள் சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

லாக்டவுனுக்கு முடிவு கட்டுங்கள் என கோஷம் எழுப்பியபடி தெருவீதிகளில் மக்கள் செல்லும் காட்சிகள் சீனாவின் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஜின் ஜியாங் மாகாண தலைநர் உரும்க்கியில் இந்த போராட்டம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு கடந்த 100 தினங்களுக்கும் மேலாக லாக்டவுண் அமலில் இருக்கிறது.

அந்த நகரத்தில் வசிக்கும் 40 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொதித்துப் போன மக்கள் சீன அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியிருக்கலாம் எனத்தெரிகிறது.

மக்களின் போராட்டம் ஒருபக்கம் ஆங்காங்கே தொடர்ந்தாலும் இது குறித்து சீன அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை 3 லட்சத்து 04 ஆயிரத்து 093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,232 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் அந்த வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் அந்நாட்டு அரசுக்கு இது புது தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும்.. இன்னொரு பக்கம் பொது முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் செய்து வருவதாலும் என்ன செய்வதென்று தெரியாமல் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

சீனாவில் ஒருநாள் பாதிப்பு சுமார் 31 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா தவித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது கூட அங்கு 28 ஆயிரம் பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அந்த நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,97,516- என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Views: - 661

0

0