சாதனை படைத்த நயன்தாராவின் கூழாங்கல் திரைப்படம்: டைகர் விருது வென்ற முதல் தமிழ் படம்!

8 February 2021, 11:01 am
Koolangal 1 - Updatenews360
Quick Share

நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர்டாமில் நடந்த 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா தயாரித்த கூழாங்கல் திரைப்படம் டைகர் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்த தர்பார் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றன. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது தவிர ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் இயக்கி வருகிறார். நானும் ரௌடி தான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலர்களாக உலா வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் ரெடியாகி வருகின்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இதன் மூலமாக சில திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது இவர்களது தயாரிப்பில் கூழாங்கல் என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் என்ற நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் நடந்த 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்பட்டுள்ளது. ஆம், 2021 ஆம் ஆண்டுக்கான டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா (Tiger Competition International Film Festival) ரோட்டர்டாமில் நடந்தது. இந்த விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரௌடி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்த கூழாங்கல் என்ற படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூழாங்கல் படம் டைகர் விருதை வென்றுள்ளது. அதோடு, டைகர் விருது வென்ற முதல் தமிழ் படமாக கூழாங்கல் திகழ்கிறது. 2ஆவது இந்திய படம் டைகர் விருது கிடைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சனல் குமார் சசிதரனுடைய செக்ஸி துர்கா படம் டைகர் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்தது குறித்து இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் கூறியிருப்பதாவது : அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன்! கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்துள்ளது. எங்களுடைய கடின உழைப்பு, பொறுமை மற்றும் கனவு ஒருவழியாக நிறைவேறியுள்ளது. உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது: முதல் முறையாக கூழாங்கல் என்ற தமிழ் படத்திற்கு டைகர் விருது கிடைத்துள்ளது. வினோத்தின் கடின உழைப்புக்கு முதல் படத்திலேயே இது போன்ற ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. கூழாங்கல் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட முதல் படம். உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. வினோத் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி. பல ஊர்ல இருக்கரவங்கல ஓட விட்டாப்புல என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 1

0

0