42 ஆண்டுகால சினிமா வாழ்க்கை: முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்!

1 February 2021, 6:46 pm
Quick Share

காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வந்த நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 1979 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கோயில் இரு தீபங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் செந்தில். இந்தப் படத்தைத் தொடர்ந்து இதிக்கார பக்கி, கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், ஆடுகள் நனைகின்றன, இன்று போய் நாளை வா என்று பல படங்களில் நடித்திருந்தாலும், மலையூர் மம்பட்டியான் படமே செந்திலை அடையாளம் காட்டியது. அப்புறம் என்ன, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி கடந்த 80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அதோடு, கவுண்டமனி உடன் இணைந்து செந்தில் செய்த காமெடி அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இருவரும் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அத்தனை படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கா? ஆகியவை இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. விஜய், அஜித், ரஜினிகாந்த், சரத்குமார், விக்ரம், கார்த்திக், விஜயகாந்த் என்று அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள செந்தில் வருடத்திற்கு 40க்கும் அதிகமான படங்களில் நடித்து வெளியிடும் அளவிற்கு தமிழ் சினிமாவை தன் கைவசம் வைத்திருந்தார். தற்போது 69 வயதாகும் செந்தில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தானா சேர்ந்த கூட்டம், சார்லி சாப்ளின் 2, ஓவியாவை விட்டா யாரு, காதலிக்க யாருமில்லை, பிஸ்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லை. இந்த நிலையில், ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதுவும், 42 ஆண்டுகள் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்கிறாராம். ஆனால், இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் சமீர் பரத் ராம் தயாரிக்கிறார். செந்தில் முதல் முறையாக ஹீரோ அவதாரம் எடுப்பதால், அவரை திரையில் காண்பதற்கு அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 22

0

0