“அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைத்திருக்கிறேன்..” – நடிகர் விவேக் மரணத்திற்கு மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்திய சிம்பு

17 April 2021, 11:43 pm
Quick Share

மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அவர் காலமானார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பாமர மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நடிகர் விவேக்கிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில் சிம்புவும் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு அண்ணன், நம் சின்ன கலைவாணர் என் முகம் மாறாத மனிதர் எல்லோரிடமும் இயல்பாக பழகுபவர். கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்க கொடுத்தவர். இன்று மூச்சற்று விட்டார் என்ற பெரும் துயர செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

சைக்கிளிங் உடற்பயிற்சி யோகா இசை என மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக, நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார். பண்பாளர், இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கும் முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துக்களை போதித்து வந்தார். மரங்களை நடுங்கள் என ஐயா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாக கொண்டு சென்று செயல்படுத்திய செயல்வீரர்.

பத்மஸ்ரீ விருதுக்கு பொருத்தமானவராக நிறைந்திருந்தார். அவர் மறைந்தாலும் அவர் செய்த, செய்கின்ற செயல்களில் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்து இருக்க வைக்கும் நம்மிடையே நிலைத்திருப்பார். என் மீது அக்கறை கொண்டவர், எப்போதும் என் நல்லது எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

அவருக்கு நாம் செய்யவேண்டியது அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைத்திருக்கிறேன். சின்ன கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்திற்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதய அஞ்சலிகள் விவேக் சார் என கூறியிருக்கிறார்.

Views: - 38

1

0