நடிப்பின் பொக்கிஷம் நடிகர் திலகம் ‘சிவாஜி கணேசன்’!! தன்னை மறந்தாலும்… புகழை ஈன்றுக் கொடுத்த கலைஞன்..!
1 October 2020, 12:36 pmஅருகில் இருப்பதாலேயே சில அற்புதங்கள் நம் அறிவுக்கு எட்டாமல் போகும். பக்கத்தில் இருப்பதாலேயே சில பரவசங்கள் நம் பார்வையில் படாமல் போகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் நடிப்புலக மாமேதை, அப்படித்தான் எந்தத் தமிழராலும் அடையாளம் காணப் படாமல் அஸ்தமனம் ஆனார்.
வெளிநாடுகளெல்லாம் வெறிபிடித்து கொண்டாடும் ராமானுஜன் எனும் அரிய கணித மேதையை நம் பக்கத்தில் இருந்த காரணத்தாலேயே அவரின் மகத்துவம் புரியாமலிருக்கும் மகத்தான தமிழர்களல்லவா நாமெல்லோரும்!
இன்றைக்கு திரையுலகை எல்லோரும் ரசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், நம் இளைஞர்களிடம் “மிகச் சிறந்த உலக நடிகர்கள் யார் யார்” என்று கேட்டுப் பாருங்கள் – “மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள், டோனி கர்டிஸ், அல் பசீனா….” என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு திறமை வாய்ந்த மாபெரும் நடிப்புக் கலை பொக்கிஷமான சிவாஜி கணேசன் என்கிற மகத்தான தமிழனை அவர்கள் மறந்தும் சொல்ல மாட்டார்கள்.
ஹாலிவுட்டில் மட்டும் சிவாஜி பிறந்திருந்தால் அனைத்து உலகமும் அவரை ஆராதித்திருக்கும். நம் தமிழர்களும் அவரை உச்சந்தலையில் வைத்து ஊர்வலம் வந்திருப்பார்கள். என்ன செய்வது? சிவாஜி தமிழனாகப் பிறந்து விட்டாரே – அதனால் அவரின் உயரிய பெருமைகள் நம்மால் உணரப் படாமலே போய்விட்டது.
பராசக்தி என்பது அவரது முதல் படம். உலகத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் முதல் படத்தில் சொதப்புவார்கள். ஏனெனில் அவர்களுக்கு காமிரா கூச்சம் இருப்பதால் அவர்களால் நல்ல நடிப்பை வழங்க முடியாது.
தயைகூர்ந்து பராசக்தி படத்தை போட்டுப் பாருங்கள். பிரமித்து விடுவீர்கள், ஆச்சரியப் படுவீர்கள், ஸ்தம்பித்து விடுவீர்கள்!! “இதுதான் இந்த நடிகனின் முதல் படம்” என்று சூடம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டீர்கள். அதுதான் நடிப்பு.. அவர்தான் சிவாஜி.
மற்ற எல்லா நடிகர்களின் படங்களையும் போட்டுப் பாருங்கள், சிவாஜியின் படத்தைப் போட வேண்டாம், அந்தப் படத்தின் சவுண்ட் டிராக்கை மட்டும், அதாவது அப்படத்தின் ஒலி வடிவத்தை மட்டும் போட்டுப் பாருங்கள், சிவாஜியை நீங்கள் திரையில் உங்கள் கண்களால் பார்க்கவே வேண்டாம், அவரது குரலே அந்தக் கதை முழுவதையும் உங்களுக்கு உணர்த்தி விடும்.
விழியால் நடித்தார் –
வெறும் குரலால் நடித்தார் –
மொழி உச்சரிப்பால் நடித்தார் –
முழுமையான உணர்வால் நடித்தார் –
புருவத்தால் நடித்தார் –
புலன்கள் அனைத்தாலும் நடித்தார்.
இவை மட்டுமா?
தன்னுடன் இருந்த அஃறிணைப் பொருட்களையும் நடிக்க வைத்தார்.
கௌரவம் படத்தில் அவர் வாயிலிருக்கும் பைப் நடிக்கும்.
வசந்த மாளிகை படத்தில் அவர் கையிலிருக்கும் கண்ணாடி க்ளாஸ் நடிக்கும்.
உயர்ந்த மனிதன் படத்தில் “அந்த நாள் ஞாபகம்” பாடலில் அவர் கையிலுள்ள வாக்கிங் ஸ்டிக்கை நடிக்க வைத்தார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரத்தை நடிக்க வைத்தார்.
மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் மிருதங்கத்தை நடிக்க வைத்தார்.
சாந்தி படத்தில் “யாரந்த நிலவு” பாடலில் சிகரெட்டை நடிக்க வைத்தார்.
சிவந்த மண் படத்தில் “பட்டத்து ராணி” பாடலில் கையிலிருக்கும் சாட்டையை நடிக்க வைத்தார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி அஃறிணைப் பொருட்களை ஆட்டுவித்து இயக்கி நடிக்க வைக்கிற ஒரேயொரு கலைஞனை உலகில் வேறு எங்காவது அடையாளம் காட்ட முடியுமா?
அதுதான் சிவாஜி.
வரலாற்றுப் பாத்திரங்களை வடித்தெடுத்து வாழ்ந்து காட்டிய ஒரே நடிகர் சிவாஜி. புராணப் பாத்திரங்களுக்கு பொலிவு ஊட்டி நம் புலன்களையெல்லாம் புல்லரிக்கச் செய்த ஒரே நடிகர் சிவாஜி.
திரை வாழ்வில் திறமையாக நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு , நிஜ வாழ்வில் சுத்தமாக நடிக்கவே தெரியாது. அவ்வளவு மெய்யாக வாழ்ந்தவர். வெளிநாடுகளெல்லாம் அவருக்கு விழா கொண்டாடி மகிழ்ந்தன. பிரான்ஸ் நாடு தன் உயரிய விருதான செவாலியே கொடுத்து சிறப்பித்தது. அமெரிக்கா தன் மாநகரத்தின் கௌரவ மேயர் ஆக்கி அவரை கௌரவப படுத்தியது.
சிங்கப்பூர் நாடு தனது பாராளுமன்றத்தில் அவரது நடிப்பைப் புகழ்ந்து தீர்மானமே போட்டது. ஆசியா ஆப்ரிக்கா இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் இவரே என்று எகிப்து அவரைக் கொண்டாடியது.
ஆனால் அவர் பிறந்த இந்திய நாடு மட்டும், அவரை சிறந்த நடிகராகக் கடைசி வரை அங்கீகரிக்கவேயில்லை.
நடிப்பில் Indian style of acting, Roman style of acting, Hollywood style of acting என்பதாகப் பல வகைகள் உண்டு. இந்த அனைத்திலும் கொடி நாட்டி முத்திரை பதித்த ஒரே நடிகர் சிவாஜி.
காமிராவில் நடிப்பை வெளிப்படுத்த பல கோணங்கள் உண்டு. க்ளோஸ் அப், மிட் க்ளாஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட், மிட் லாங் ஷாட் … என்பதான பல வகைக் கோணங்களிலும், தன் நடிப்பை தெளிவாக வெளிப்படுத்தும் ஒரே நடிகர் சிவாஜி.
மிருது நடிப்பு வேண்டுமா –
மிகை நடிப்பு வேண்டுமா –
இயல்பு நடிப்பு வேண்டுமா –
இறுக்க நடிப்பு வேண்டுமா –
உணர்ச்சி நடிப்பு வேண்டுமா –
உருவக நடிப்பு வேண்டுமா –
என்ன வேண்டும் உங்களுக்கு அத்தனை பாவனைகளையும் பர்ஃபாமென்ஸாகப் பளிச்சிட வைக்கிற பேராற்றல் அவரிடம் இருந்தது. ஹாலிவுட் சினிமா நூலகத்தில் இவரது படங்கள் பாடமாக இருக்கின்றன. “தொண்ணூறு விதமான பாவனைகள் காட்டும் ஒரே நடிகர்” என்று இவரைக் குறிப்பிடுகிறார்கள்.
“தமிழை எப்படி உச்சரிப்பது” என்று அவரது வசனங்கள் வகுப்பெடுத்து போதித்தன. “தேசபக்தி என்றால் என்ன” என்று அவரது படங்களே அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்தின.
ஆனால் ஒன்று தன்னை கௌரவிக்க மறந்த இந்தியா மீது பாசத்தைப் பொழிந்து கடைசிவரை தேசபக்தனாக வாழ்ந்தார் சிவாஜி. தன்னைக் கண்ணியப் படுத்தத் தவறிய தமிழ் நாட்டின் மீது தணியாத அன்பைச் சொரிந்து இறுதிவரை தமிழனாக வாழ்வதில் இன்பமுற்றவர் சிவாஜி.
சிவாஜி.. தமிழ்நாட்டின் வரம் –
இந்தியாவின் முகம் –
நடிப்புக் கலையின் நடமாடும் குருகுலம்!
அவரது பிறந்த நாளில் அவரை நினைத்துப் போற்றுவோம்.