‘இதுவும் கடந்து போகும்’: நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா அட்டாக்..!!

6 May 2021, 1:37 pm
Quick Share

சென்னை: நடிகை ஆண்ட்ரியா கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பல அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களையும் நாம் இழந்து விட்டோம்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தான் பாடிக்கொண்டே பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ‘அன்பார்ந்த அனைவருக்கும் கடந்த வாரம் எனக்குக் கோவிட்-19 தொற்று உறுதியானது. என்னிடம் பேசிய, என்னைப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி. இதனால் சமூக ஊடகங்களிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன்.

தொற்று ஒரு காரணம் இன்னொரு பக்கம் நமது தேசம் இவ்வளவு மோசமான கொரோனா நெருக்கடியைச் சந்திக்கும் போது என்ன பதிவிட வேண்டும் என எனக்குத் தெரியவில்லை என்பது இன்னொரு காரணம். எப்போதும் போல எனக்கு என்ன பேசுவது என்று தெரியாத தருணங்களில் நான் என் மனதார பாடுவேன்.

அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும். இந்த தொற்று காலம் முடிந்து நாம் மீண்டும் சந்திப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

Views: - 213

1

1