பண்டாரத்தி பாடல் சர்ச்சை: மஞ்சனத்தின்னு பேரு மாத்திய மாரி செல்வராஜ்!

Author: Poorni
26 March 2021, 9:20 am
Quick Share


கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி பாடலை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்கில் இயக்குநர் மாரி செல்வராஜ் புதிய முடிவெடுத்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள கர்ணன் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அண்மையில், இந்தப் பட த்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில், இந்தப் பாடலை நீக்கக் கோரி ராஜா பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் எனும் பாடல் வெளியானது. இந்தப் பாடலில் பண்டாரத்தி என் சக்காளத்தி என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூக பிரிவு.

பண்டாரத்தி புராணம் பாடலில் எங்களது இன பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், எங்களது சமூகத்தை காயப்படுத்தும் வகையிலும், வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விரோதமானது. சட்டத்திற்கு புறம்பானது. ஆகையால், இந்தப் பாடலை நீக்கும் வரையிலும் கர்ணன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் தனுஷ், பாடலாசிரியர், பின்னணி பாடகர் தேவா, மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, தணிக்கைத் துறை மண்டல அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பண்டாரத்தி பாடல் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் புதிய முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, பண்டாரத்தில் என்ற வார்த்தைக்குப் பதிலாக மஞ்சனத்தி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா எனும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுக்கிறது.


ஆனால், நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள்…
இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான்…ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும் என்று பதிவிட்டுள்ளார். அதோடு பட த்தில் மாற்றம் செய்யப்பட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. YouTube விதியின்படி ஓரிரு நாட்களில் தானாக மாறிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 191

0

0