இனி உங்கள் படைப்பு மக்களிடம் பேசும்… சினிமாவை சீரழிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியொரு படமா..!! ருத்ர தாண்டவம் படத்திற்கு தங்கர் பச்சன் பாராட்டு
Author: Babu Lakshmanan30 September 2021, 2:07 pm
சென்னை : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் இயக்குநர் மோகனுக்கு சக இயக்குநர் தங்கர் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.
உங்களின் முந்தைய திரைப்படம் “திரெளபதி” பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும், எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துதான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.
மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாக கருத்துகளாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இப்படத்தை பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்.
மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுப்போக்கு எனும் போதைப்பொருளை திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தை பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி முதலீடு செய்த தொகையை பல மடங்காக திருப்பி எடுப்பது மட்டுமல்ல. சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை. இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக்கொண்டு, கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாக பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக்குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
2
0