செகண்ட் டைம் எஸ்கேவுக்கு ஜோடியான டாக்டர் பட நடிகை!

29 January 2021, 8:53 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரிடத்திலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால், அடுத்தடுத்து படங்களில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் எஸ்கே19 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பேச்சுலர் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சிவகார்த்திகேயன் டான் என்றும், இசை அனிருத் என்றும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு டான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இசை எனது நெருங்கிய ராக்ஸ்டார் அனிருத், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் சேர்வது என்பது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். எஸ்கே19 படம் முழுக்க முழுக்க கல்லூரி கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும்,

இதில், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக, அதுவும், இன்ஜினியரிங் அல்லது எம்பிஏ மாணவராக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இவருடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ்,பாலா, ஷிவாங்கி நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வரும் பிப்ரவரி மாதத்தின் 2ஆவது வாரத்தில் டான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், அதுவும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா40 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்க பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Views: - 0

0

0