டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழுவினர் திருப்பதி வந்தால் கால்களை உடைப்போம்.. தேவஸ்தான குழு அதிகாரி ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2025, 11:41 am
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இந்துக்களின் மன உணர்வுகளையும் திருமாலின் திருநாமங்களையும் இழிவுபடுத்தும் வகையிலான பாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஜனசேனா கட்சி திருப்பதி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பானுப்பிரகாஷ் ரெட்டி குறிப்பிட்ட அந்த பாடலை படத்திலிருந்து நீக்காவிட்டால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகர் சந்தானத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதையும் படியுங்க: படத்தோட பட்ஜெட்டே அவ்வளவு கிடையாதே- ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!
மேலும் அந்தப் பாடலை நீக்கி மன்னிப்பு கேட்க தவறினால் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் பானு பிரகாஷ் ரெட்டி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய பானுப்பிரகாஷ் ரெட்டி, இந்துக்கள் தினமும் காலையில் எழும்போது ஏழுமலையானை நினைத்து அவருடைய திருநாமங்களை சொல்லிக் கொண்டு படுக்கையில் இருந்து எழுவது வழக்கம்.
அத்தகைய திருநாமங்களை இழிவு படுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி இந்துக்களின் மன உணர்வு, மத உணர்வு ஆகியோற்றுடன் விளையாண்டு இருக்கிறார்கள்.
அந்த பாடலை எழுதியவர், பாடியவர், அதற்காக ஆடியவர், அந்த படத்தை தயாரித்தவர் ஆகியோரை தமிழக பக்தர்கள் உதைத்து அவர்களுடைய தோலை உரிக்க வேண்டும்.
பட தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல் தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக தமிழக பக்தர்கள் பலர் தொலைபேசி மூலம் என்னிடம் கூறினார்கள். அந்த பட குழுவினர் நாங்களும் திருப்பதி மலைக்கு பாதையாத்திரையாக செல்வோம் என்று கூறி இருக்கின்றனர்.
குறிப்பிட்ட அந்த பாடலை திரைப்படத்திலிருந்து நீக்காமல் பாதயாத்திரையாக செல்கிறேன் என்று திருப்பதி மலை அடிவாரத்திற்கு வந்தால் அப்போது அவர்களுக்கு தெரியும் ஏழு பக்தர்களின் ஆவேசம்.
குறிப்பிட்ட பாடலை நீக்காமல் திருப்பதி மலைக்கு செல்வதற்காக வருகிறேன் என்று இங்கு வந்தால் மலையடிவாரத்தில் அவர்களுடைய காலை உடைப்போம்.இது திருப்பதி மலை என்பதால் இங்கு இதற்கு மேல் என்னால் கடுமையாகப் பேச இயலாது நிலை உள்ளது.
தங்கள் சுயலாபத்திற்காக அந்த திரைப்படத்திற்கு அனுமதி அளித்த திரைப்பட தணிக்கை துறை மீதும் வழக்கு தொடரப்படும். அறங்காவலர் குழுவின் உறுப்பினராக குறிப்பிட்ட அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு முழு உரிமை உள்ளது என்று அப்போது கூறினார்.