தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது. கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஆனால் கமல்ஹாசன், அன்பு மன்னிப்பு கேட்காது என கூறியிருந்தார். மீண்டும் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, பல மிரட்டல்கள் எனக்கு ஏற்கனவே வந்துள்ளன. நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால் தவறு செய்யாத விஷயத்துக்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், கமலுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன்.
அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று ‘கிளாப்’ அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர்.ராஜ்குமார் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல்ஹாசன் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.ராஜ்குமாரை தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமாரை தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல்ஹாசன் . மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமாரே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
அந்த நெகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய கமல்ஹாசன், டாக்டர்.ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும், சிவராஜ்குமார் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, ‘அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார்’ என்னும் பொருள்பட பேசினார்.
சிவராஜ்குமார் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே ‘கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமல்ஹாசனுக்கு ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.
உண்மை இவ்வாறு இருக்க, அதற்கு மாறாக கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி, மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து, தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர் கமல் ஹாசனை கருவியாக பயன்படுத்தி கன்னட – தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசனின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என, தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்.
எந்தக் கலையும், மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும், எல்லைகளையும் கடந்தது. அந்தக் கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும். மொழிகள் அனைத்துமே நீடு புகழோடு வாழ வேண்டும், “அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இறுகப் பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். பேதமற்ற ஒற்றுமை பாராட்டும்” என நாசர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.