‘ஜெய் பீம்’ வன்னியர்களுக்கு எதிரான திரைப்படமா..? சர்ச்சை காட்சியால் வலுக்கும் எதிர்ப்பு…!!!இன்னும் எத்தனை வன்மம்டா வச்சிருக்கீங்க..!!!

Author: Babu Lakshmanan
2 November 2021, 12:02 pm
jai bhim cover - updatenews360
Quick Share

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் வன்னியர்களுக்கு எதிரானதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்தப் படத்திற்கு கடும்எ எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர்கள் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தை செ. ஞானவேல் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘ஜெய் பீம்’.

அதாவது, கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு (மணிகண்டன்), மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்தப் படத்தில், ஊர் தலைவர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் ராஜாக்கண்ணுவையும், அவரது குடும்பத்தையும் போலீசார் கைது செய்து, கொடுமைப்படுத்துகிறது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற நோக்கில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு ராஜாக்கண்ணு குடும்பத்தை சித்ரவதை செய்து, சின்னாபின்னமாக்குகிறது போலீஸ்.

பின்னர், காவலர் பிடியில் இருந்து தப்பும் ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு, சந்துரு (சூர்யா) சட்டப்பாதுகாப்பு கொடுக்கிறார். மேலும், அவர்களுக்கு வலிகளையும், சட்டத்தின் ஓட்டைகளையும் எடுத்துக் காட்டுவதே எஞ்சிய கதையாகும். ஒரு பின்தங்கிய சமூகத்தினர் எதிர்கொள்ளும் இன்னல்களை தத்ரூபமாக காட்டியுள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

இந்தப் படத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. இருளர் இன மக்களை அடித்து துன்புறுத்தும் போலீஸ் உயர் அதிகாரியை ஒரு வன்னியர் போல சித்தரித்திருப்பதுதான் இங்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த போலீஸ் அதிகாரி தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது, வீட்டில் இருக்கும் காலண்டரில் வன்னியர் இன மக்களின் சின்னம் பொறித்திருக்கிறது. எனவே, வன்னியர் இனத்தைச் சேர்ந்த காவலர், இருளர் இன மக்களை துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே, ஜெய் பீம் திரைப்படம் மீது வன்னியர் சமுதாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சமுதாய மக்களின் இன்னல்களையும், துன்பங்களையும் வெளிப்படுத்த, மற்றொரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதா..? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Views: - 996

2

0