மீண்டும் இணைந்த காஞ்சனா கூட்டணி: அதுல திருநங்கை, இதுல என்ன வில்லனா?

5 February 2021, 10:47 pm
Quick Share

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதற்கு நடிகர் சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இயக்குநரோடு மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். பேய் படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் இவரை மிஞ்ச எவரும் இல்லை. அந்தளவிற்கு வரிசையாக முனி, முனி 2: காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று பேய் படங்களை இயக்கி, நடித்து ஹிட் கொடுத்துள்ளார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படம் வெளியானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது அறிமுக இயக்குநர் எஸ் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். எஸ் கதிரேசன் இதற்கு முன்னதாக பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்பட ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது ருத்ரன் படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ராகவா லாரன்ஸூக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ருத்ரன் படத்தின் மூலமாக இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0