கர்ணன் பட விமர்சனம் – நத்தை, ஆமையை விட ஸ்லோ !

9 April 2021, 10:48 am
Quick Share

மாஸ்டர் படத்திற்கு பிறகு “கூட்டம் இல்லை, கூட்டம் இல்லை” என்று புலம்பிய தியேட்டர்காரர்களுக்கு இன்று கர்ணன் பட ரிலீஸை ஒட்டி சற்று ஆறுதலாக இருக்கும். அப்படியிருக்கிறது கூட்டம், திருவிழா போல.

தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகாலையிலேயே ராணுவம் போல் திரண்டு வந்துள்ளார்கள். சரி விமர்சனத்திற்கு வருவோம் முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதித்த மாரிசெல்வராஜ் இதில் என்ன செய்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்த நேரத்தில் படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட்டடிக்க தொற்றிக்கொண்டது பேரார்வம்.

தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்தால் ஏமாற்றம். படத்தின் ஆரம்பம் ஒரு பத்து நிமிடங்கள் பட்டையைக் கிளப்ப, அதன்பிறகு கதை ஆரம்பிக்கும் என்று பார்த்தால் இழுவை. ஒன்றரை மணி நேரம் இழுத்தடித்து இடைவேளை காட்சி மட்டுமே கொஞ்சம் எறும்புக் கடித்தார் போல் இருக்கிறது. கிட்டத்தட்ட இடைவேளை வரை ஒரு முழு படத்தை பார்த்தது போல் இருக்கிறது.

கதையின் கரு என்ன என்றால், வழக்கம்போல்
ஒரு கீழ் சமூகத்தினர், மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதை கண்டு பொங்குகிறார் நம்ம கர்ணனான தனுஷ், தன் ஊருக்காக, தன் இன மக்களுக்காக இவர் போராடுவதே இப்படத்தின் கதை.

இந்த கதையை ஒரே ஆளாக தனது தோளில் தாங்கி செல்கிறார் தனுஷ். ஆட்டம், பாட்டம், காதல், கோபம், என மீண்டும் அசுரன் தனுஷை பார்க்கமுடிகிறது. நடிகை ரஜிஷா ஹீரோயினாக நடித்துள்ளார் .மேலும் கௌரி கிஷன், யோகி பாபு மற்றும் லால் ஆகியோர் இதில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷிற்கு பிறகு திரையரங்கில் லால் அப்ளாசை அள்ளுகிறார். இதில் யோகிபாபு பாபுவுக்கு சற்று மாறுபட்ட கதாபாத்திரம், நல்ல முயற்சி. கௌரி கிஷன், லக்ஷ்மி சந்திரமௌலி மற்றும் GM குமார், சண்முகராஜன், குதிரை ஓட்டும் சிறுவனின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பலம்.

படத்தில் சில நுணுக்கமான காட்சிகள் அதாவது சிம்பாலிக்காக சில விஷயங்களை புரிய வைக்கும் காட்சிகள் சொல்லி வைத்தார் போல் அமைந்துள்ளதால் ரசிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு இவர்கள் ஏன் தலை இல்லாத ஒரு கடவுளைக் கும்பிடுகிறார்கள் ? ஏன் தலையில்லாமல் ஒரு உருவத்தை வரைகிறார்கள்? அதன்பிறகு, அந்த சிறுவன், தனுஷ் க்ளைமாக்ஸில் அவனின் குதிரை ஓட்டுவதற்காகவே குதிரையை வாங்கி வருகிறான் என்று சொல்லி வைத்தார் போல சில விஷயங்கள் நடப்பது படத்துடன் ஒட்ட முடியவில்லை.

இரண்டாம் பாதி நன்றாக தொடங்கிய நட்டியின் கதாபாத்திரம், கொஞ்ச நேரத்தில் வழக்கமான வில்லன் பாத்திரமாக அமைந்தது ஏமாற்றம். சத்யஜித்ரே படங்களில் வருவது போல காட்சிகளுக்கு இடையே நத்தை, புழு, கம்பளி பூச்சி, கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி, இதையெல்லாம் நகர்வதை காட்டினால் கிளாசிக் என்று நினைத்துக் கொண்டு எடுத்ததுதான் இந்தக் கர்ணன். இந்த படைப்பில் அயராத உழைப்பு இருந்தாலும் கதை ஒரு இடத்திற்கு மேல் நகர்த்த முடியாமல், திணறுவது அப்பட்டமாக தெரிகிறது. இந்த மேல்சாதி, கீழ்சாதி, உரிமை போராட்டம் என்று வழக்கமான கதைக்குள் சிக்கி தவிக்கிறது நடிகர்களின் உழைப்பு.

படத்தின் பலம் :

1)மாரி செல்வராஜின் படமாக்கல் திறன்.

2)சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும்.

3)தனுஷ் மற்றும் லால் அவர்களின் அசுர தனமான நடிப்பு.

4)தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு.

பலவீனம்

1)ஜாதி பிரச்சனை மையப்படுத்திய வழக்கமான கதை.

2)நத்தை வேகத்தில் ஊறும் திரைக்கதை.

3)எடிட்டிங்

4) சொல்லிவைத்தார் போல அமைந்த சில காட்சிகள்.

5) நிறைய கிளை கதைகள்

Views: - 110

3

3