இந்தியாவில் பாட்டுல நம்பர் ஒன் இடம் பிடிச்ச வாத்தி கம்மிங்!
28 January 2021, 11:44 pmதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இந்தியாவில் டாப் ஆல்பம் சாங் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த மாஸ்டர் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து அமோக வரவேற்பு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.225 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்தது. தமிழகத்தில் ரூ.115 கோடிக்கும் அதிகமாகவும், சென்னையில் ரூ.10 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் அள்ளியது. மாஸ்டர் திரையரங்கிற்கு வந்து வெற்றிநடை போட்டதைத் தொடர்ந்து, ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் நாளை 29 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் டாப் ஆல்பம் பட்டியலில் மாஸ்டர் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதில், வாத்தி கம்மிங் மற்றும் மாஸ்டர் தி பிளாஸ்டர் ஆகிய இரு பாடல்களும் இந்தியாவில் டாப் பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா சுப்பிரமணியன், பிரேம்குமார், சாய் தீனா, பூவையார் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0