மாஸ்டர் அமேசான் பிரைம் ரிலீஸ் டேட் கன்ஃபார்ம்: 240 நாடுகள், பிரதேசங்களில் ரசிகர்கள் ஹேப்பி!

27 January 2021, 12:30 pm
Master 1 -Updatenews360
Quick Share

விஜய் நடிப்பில் திரைக்கு வந்த மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 29 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வந்தது. இது குறித்து மாஸ்டர் படக்குழுவினர் கூறியிருந்ததாவது: பெரிய பெரிய படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களிடமும், படக்குழுவினரிடமும் ஓடிடி நிறுவனங்கள் படத்தை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது வழக்கம் தான். ஏற்கனவே சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், பென்குயின், மாறா, பூமி ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன.
அப்படியிருக்கும் போது மாஸ்டர் படக்குழுவினரிடமும் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், நாங்கள் எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதாவது, கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று கூறியிருந்தனர்.

மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால், திரையரங்கில் மாஸ்டர் வெளியான பிறகு இரு வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்தும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருவதால், இன்னும் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து முறையான அறிவிப்பை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 29 ஆம் தேதி மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு பாக்யராஜ், அர்ஜூன்ன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களாக நடித்துள்ள தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் மோதல் ரசிகர்களை சீட்டின் நுனிப்பகுதிக்கே கொண்டு வரக்கூடியவையாக அமைந்துள்ளன.. இந்தியா உள்பட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.

இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது, ‘அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பதில் நாங்க பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்று மாஸ்டர். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்போடும், வசதியோடும், மாஸ்டர் படத்தை பார்த்து ரசிப்பதற்கான ஒரு வாய்ப்பை கொடுப்பதில், மகிழ்ச்சியடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தின் தனது கதாபாத்திரம் குறித்து தளபதி விஜய் கூறியிருப்பதாவது: குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் துரைராஜ் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படும் அவர், அங்குத் தனது எதிரியான பவானியைச் சந்திக்கிறார். பவானியாக வரும் விஜய் சேதுபதி அந்தப் பள்ளிக் குழந்தைகளைத் தனது தேவைக்காக பயன்படுத்தி வருகிறார். ஜான் துரைராஜ் மற்றும் பவானிக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ரோலர் கோஸ்டர் ரைடாக இருக்கும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது: மாஸ்டர் படம் இரண்டு ஆக்‌ஷன் ஹீரோக்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது. இதுவே ரசிகர்களை, மக்களை திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கச் செய்யும். எனினும், அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற ஒவ்வொரு பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம். என் படம் அமேசான் பிரைம் வீடியோவின் மூலம் உலகளாவிய அளவில் வெளியாவது ஒரு இயக்குநராக மிகவும் சந்தோஷமாக உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியருக்கும், அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

Views: - 2

0

0