தயவுசெஞ்சு தல நீங்க உங்க PROவ மாத்துங்க: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்!

Author: Poorni
25 December 2020, 4:00 pm
Quick Share


வலிமை படத்தின் அப்டேட் இதுவரை வெளிவராத நிலையில், அஜித் ரசிகர்கள் பிஆர்ஓவை மாற்றச் சொல்லி ThalaChangeYourPRO என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் போலீஸ் கதையை மையப்படுத்திய படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.


தொடர்ந்து நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக அஜித்தின் வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


வரும் ஜனவரிக்குள் படப்பிடிப்பை முடித்து மே 1 ஆம் அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தை திரையிட படக்குழுவினர் கடினமாக உழைத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தொடர்ந்து, தனுஷ், சூர்யா, விஜய் ஆகியோர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அஜித் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு, டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.


இதற்கிடையில், இது குறித்து அறிக்கை வெளியிட்ட தல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, வலிமை படத்திற்காக அஜித் மற்றும் அவருடன் இணைந்து படக்குழுவினரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரபலங்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது தல அஜித்தின் வலிமை படம் குறித்து மட்டும் இதுவரை எந்த அறிவிப்பும், அப்டேட்டும் வரவில்லை.

இதனால், விரக்தியடைந்த தல ரசிகர்கள் தயவு செஞ்சு உங்களது பிஆர்ஓவை மாற்றுங்கள் என்று கூறி ThalaChangeYourPRO என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், அதில், அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவையும் டேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 81

0

0