கண்டிப்பா வருவான்… கேஜிஎஃப் 2 டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

19 December 2020, 4:47 pm
Quick Share


நடிகர் யாஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷின் அதிரடி ஆக்‌ஷனில் கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னத்தில் திரைக்கு வந்த படம் கேஜிஎஃப் சேப்டர் 1 (K.G.F: Chapter 1). கன்னடத்தில் இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 1, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


KGF படத்தின் மூலம் ரசிகர்களிடம் நடிகர் யாஷ் நல்ல வரவேற்பைப் பெற்றார். பிறக்கும் போது ஏழையாக பிறப்பது ஒன்றும் குற்றமில்லை. ஆனால், ஏழையாகவே இறப்பது தான் மிகப்பெரிய குற்றம் என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அதிரடி ஆக்‌ஷனையும் ஒரு சிறுவன் தாதாவாக உருவான கதையையும் இந்தப் படத்தின் காட்சிகள் சித்தரிக்கிறது.


படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. அம்மாவிற்கு கொடுத்த சத்தியம், தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொள்ளும் தைரியம், துணிச்சல், ஏழை கொத்தடிமை மக்களை காப்பாற்றும் குணம், காதல் காட்சிகள் என்று அனைத்திலுமே பெருமை சேர்த்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.


இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி பாதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதமே படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளி வந்தது. ஆனால், கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.


தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், சஞ்சய் தத் மற்றும் யாஷ் ஆகியோர் மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இந்த நிலையில், இன்னும் 12 நாட்களில் இந்த 2020 ஆம் ஆண்டு முடியும் நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஒரு வழியாக அந்த நாளும் வந்துவிட்டது. கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
டிசம்பர் 21 அன்று ஒரு சடங்கு போல நாங்கள் வழக்கமாக பின்பற்றும் ஒரு விஷயம். இந்த ஆண்டும் அந்த சடங்கு நடக்கும். அது எங்களது அற்புதமான ரசிகர்களுக்காக மட்டுமே. வரும் டிசம்பர் 21 ஆம் தேதி காலை 10.08 மணிக்கு உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து எங்களது அத்தனை அதிகாரப்பூர்வ பக்கங்களிலும்…

எங்களது இந்தப் பயணத்தில் எங்களைப் போன்று பொறுமையாக இருந்ததற்கும், எங்களுக்கு உங்களது ஆதரவை அளித்ததற்காகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கேஜிஎஃப் 2 டீசர் வருமா? இல்லை படத்தையே அன்றைய தினத்தில் வெளியிடுகிறார்களா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும், கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் தான் வெளிவரும் என்று பலரும் செய்தி வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0