அந்நியன் ரீமேக் விவகாரம் – ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதில் கடிதம் எழுதிய இயக்குனர் ஷங்கர்

15 April 2021, 11:01 pm
Quick Share

ஷங்கர் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வித்தியாசமான கதை களத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் அந்நியன். படம் பயங்கர ஹிட்டானது. இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

ஹிந்தியில் பென் மூவிஸ் தயாரிக்க முடிவு செய்துள்ள இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். இந்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. அதற்கான ஆவணங்களும் தன்னிடத்தில் இருப்பதால் இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதி இன்றி ரீமேக் செய்வது சட்டவிரோதமானது என இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விஷயம் கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தற்போது ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அந்நியன் படத்தின் கதைக்கு உரிமை உங்களிடம் இருப்பதாக நீங்கள் அனுப்பிய ஈமெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்நியன் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இந்தக் கதை, திரைக்கதை என்னுடையது என்று நன்றாக தெரியும். படத்திலும் கூட கதை, திரைக்கதை, இயக்கம் என்பதற்கு கீழ் என்னுடைய பெயர் தான் இடம்பெற்றது. மேலும் படத்தின் திரைக்கதையை வடிவமைக்க நான் யாரையும் நியமிக்கவில்லை.

இதை என் விருப்பத்தின்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. எழுதியவன் என்ற முறையில் எனது உரிமைகளில் யாரும் தலையிட முடியாது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் அந்நியன் படத்திற்கு வசனகர்த்தாவாக மட்டுமே இருந்தார். அதற்குரிய அங்கீகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டது. மற்றபடி என்னுடைய எழுத்தில் அவர் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. திரைக்கதை என்னிடம் இருப்பதால் என் விருப்பப்படி அதை பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.

அந்நியன் படத்திற்காக நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் பெற முடியாது. ஏனென்றால் அந்த உரிமை எழுத்துப்பூர்வமாக உங்களுக்கு நான் தரப்படவில்லை. ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் மூலம் லாபம் அடைந்து உள்ளீர்கள். தற்போது எனது எதிர்கால முயற்சிகள் மூலம் உங்களுக்கு ஏற்ற வகையில் ஆதாயம் தேடுவது போல் உள்ளது. இது போன்ற மோசமான சட்டத்திற்குப் புறம்பான உரிமை கூறுவதன் மூலம் எனது எதிர்கால படங்கள் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்படுவதால் எனது உண்மையான நிலை குறித்த தெளிவை தரவே இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. என கூறியுள்ளார்.

Views: - 25

0

0