பொள்ளாச்சியில் அனுமதியின்றி படப்பிடிப்பு…கொரோனாவை மறந்து திரண்ட மக்கள்: சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு அபராதம்..!!
Author: Aarthi Sivakumar9 August 2021, 1:48 pm
கோவை: பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை மீறியும், அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய காரணத்தாலும் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்கும் டான் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோவை மாவட்டம் பாதிப்பு எண்ணிக்கையில் மெல்லமெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கோவை மாவட்ட நிர்வாகம் தொற்றை குறைக்கும் நோக்கில்
தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. மேம்பால பகுதியில் நடைபெற்றதால் அங்கு படபிடிப்பபை காண்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் படப்பிடிப்பை காண்பதில் ஆர்வமாக நின்று கொண்டு இருந்தனர்.
இதனால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அதேபோல போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாகவும் புகார் எழுந்தது. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை காவல் நிலைய போலீசார் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை அங்கிருந்து விரட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட போக்குவரத்தையும் சரி செய்து வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
பிறகு அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.19,400 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
6
1