மாடுபிடி வீரர்களுக்கு பாராட்டு: மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசு: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

17 January 2021, 4:40 pm
Quick Share


ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.


கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஜல்லிக்கட்டு போராட்டம். பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனை மெரினா புரட்சி, இளைஞர்கள் புரட்சி, தைப் புரட்சி என்றும் அழைத்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் நடந்த இந்தப் போராட்டம் 23 ஆம் தேதி முடிவுற்றது.
ஆனால், இந்தப் போராட்டத்தின் போது, சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை நினைவு கூறும் வகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு யோகேஷ்வரனின் நினைவாக தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசு, விஜய், கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கும் மற்றும் சிறந்த காளைகளுக்காக பரிசுகள் வாங்கிய சந்தோஷ், ஜி ஆர் கார்த்திக் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் இனிமேல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்… #Jallikattu2021
மற்றொரு டுவிட்டரில், தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.


போராட்டத்தின் போது ரெயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன்.


அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0