ஏப்ரலில் தொடங்கும் விஜய் சேதுபதியின் 2ஆவது பாலிவுட் படம்!

5 February 2021, 5:27 pm
Quick Share

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் 2ஆவது பாலிவுட் படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுக்கக் கூடியவர். வயதான கதாபாத்திரம், திருநங்கை, வில்லன் என்று அனைத்து வகையான ரோல்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். ஆம், மும்பைகார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் 2ஆவது படத்திலும் நடிக்கிறார்.

அந்தாதூன் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் புனேயில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறும்படத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோர் உள்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை வைத்து மராத்தான் நடத்தவும் இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.


மும்பைக்கார் மற்றும் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் புதிய படத்தைத் தவிர காந்தி டாக்ஸ் என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அண்மையில், இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தை கிஷோர் பாண்டுராங் பெலேகர் இயக்கி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0