நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி: நாசர், விஷால், கார்த்திக் 2வது முறையாக அபார வெற்றி..!!

Author: Rajesh
20 March 2022, 6:45 pm
Quick Share

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்று, தொடர்ந்து மற்ற வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

2015ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்றது. இந்த செயற்குழு பதவிக்காலம் முடிந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் நீதிபதியை நியமித்து தேர்தலை அறிவித்தது செல்லாது என்ற புகாரோடு புதிய தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே அதீத அமைதி கடைபிடிக்கப்பட்டது.

விஷாலுக்கு எதிராக புதிய அணியை கட்டமைத்த ஐசரி கணேஷ் உள்ளிட்டோர், நாங்கள் இன்னும் விரைவாக கட்டடம் கட்டுவோம் என்பதை தாண்டி வார்த்தையில் கடுமை காட்டுவதை தவிர்த்தே வந்தனர். பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் மீது தனி மனித தாக்குதலை தொடங்கினார், விஷால் தரப்பில் உள்ள கருணாஸ். இதனால் பொறுமை இழந்த பாக்யராஜ் அணியும் விஷால் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடித்து புகார் சொல்ல தொடங்கியது.

தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பத்திற்கு இடையே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டது, பதவிக்காலம் முடிந்து தேர்தலை அறிவித்தது என பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து நீதிமன்றக் கதவுகளைத் தட்ட நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் பேங்க் லாக்கரில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது. பூட்டி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் விஷால் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலுக்கு 1720 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷுக்கு 1032 வாக்குகளும்கிடைத்தன.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 1530 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரசாந்திற்கு 794 வாக்குகளும் கிடைத்தன. துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களத்தில் நின்ற குட்டி பத்மினிக்கு 1015 வாக்குகள் கிடைத்தன.

இன்னொரு துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட கருணாஸ் 1605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உதயா 973 வாக்குகள் பெற்றார்.

Views: - 554

2

0