அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்
Author: Prasad20 June 2025, 7:16 pm
கூட்டத்தில் பலியான பெண்
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா 2” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படம் வெளியான நாளுக்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் அமைந்துள்ள சந்தியா திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அந்த நிலையில் இந்த பிரீமியர் காட்சியில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார். இதனால் திரையரங்கு வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அது மட்டுமல்லாது கூட்ட நெரிசலில் காயமடைந்த ரேவதியின் 9 வயது மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே அல்லு அர்ஜூனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதியின் கணவர் அல்லு அர்ஜூன் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இச்சம்பவம் அன்றைய தேதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
விராட் கோலியை கைது பண்ணீங்களா?
இந்த நிலையில் இன்று காலை பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் கூல் சுரேஷ், “ஆர்சிபி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தார்கள். அதற்கு நீங்கள் யாரை கைது செய்ய வேண்டும்? விராட் கோலியை கைது செய்ய வேண்டும். ஆனால் சினிமாக்காரன் மட்டும் உங்களுக்கு இளிச்சவாயன்.

புஷ்பா 2 வெளியானபோது திரையரங்கில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜூனை கைது செய்தீர்கள். ஒருவர் இறந்ததற்கே அல்லு அர்ஜூனை நீங்கள் கைது செய்யும்போது, பெங்களூரில் 11 பேர் இறந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது விராட் கோலியை நீங்கள் ஏன் கைது செய்யவில்லை? அப்படி என்றால் சினிமாக்காரன் என்றால் உங்களுக்கு இளக்காரமா?” என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
