சளி, இருமலை போக்கும் பிரமாதமான, ஆரோக்கியம் தரும் சிக்கன் சூப்!!!

27 June 2020, 12:55 pm
Quick Share

இருமல், சளி அனைத்தையும் சரி செய்ய கூடிய ஒரு மருத்துவத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். உடனே மருந்துன்னு நினைத்து பயந்துடாதீங்க…. பிரமாதமான, ஆரோக்கியமான சிக்கன் சூப் பற்றி தான் பேசீட்டு இருந்தோம். இது சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் இதனை அடித்து கொள்ள முடியாது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

எலும்புகள் உள்ள சிக்கன்- 1/2 கிலோ

வெங்காயம்- 1

தக்காளி- 2

இஞ்சி- 1 துண்டு

பூண்டு- 8 பல்

பச்சை மிளகாய்- 1

தனியா- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

மிளகு- 1 தேக்கரண்டி 

பிரியாணி இலை- 1

பட்டை- 1

கிராம்பு- 2

ஏலக்காய்- 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 1 கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

சிக்கன் சூப் செய்ய முதலில் நாம் அதற்கு தேவையான மசாலாவை ஃபிரஷாக அரைத்து கொள்ளலாம். அதற்கு ஒரு உரலில் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொர கொரவென்று இடித்து கொள்ளவும். 

அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் 8 பல் பூண்டையும் இடித்து வைத்து கொள்ளலாம். குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை  சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பாதி வதங்கிய பின் ஒரு கீறிய பச்சை மிளகாய் மற்றும் இடித்து வைத்த இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து கிளறவும். இதன் பச்சை வாசனை போன பிறகு இரண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த 1/2 கிலோ சிக்கனை சேர்த்து வதக்கவும்.

இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் நாம் இடித்து வைத்த ஃபிரஷான மசாலா தூள் சேர்த்து கிளறவும். மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மிதமான சூட்டில் மூன்று விசில் வரும்வரை காத்திருக்கவும். விசில் வந்த பின்னர் பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

Leave a Reply