அசத்தலான காலை உணவு: கோதுமை ஊத்தப்பம்!!!
21 August 2020, 11:00 amஊத்தப்பம் பொதுவாக அரிசி மாவில் தான் செய்வோம். ஆனால் இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமான கோதுமை ஊத்தப்பம் எப்படி செய்வது என பார்க்க போகிறோம். இதனை மிக எளிதாக ஒரு மணி நேரத்தில் செய்து விடலாம். இதனோடு காரசாரமான சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 1 கப்
கெட்டியான மோர்- 1 1/2 கப்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- ஒரு தேக்கரண்டி நறுக்கியது
கறிவேப்பிலை- சிறிதளவு நறுக்கியது
கொத்தமல்லி தழை- சிறிதளவு நறுக்கியது
கடுகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கோதுமை ஊத்தப்பம் செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய இஞ்சி போட்டு வதக்கவும்.
வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அடுப்பை அணைத்து இதனை ஆற விடவும். அடுத்து ஊத்தப்பத்திற்கு தேவையான மாவு கரைக்க அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும். இதனை கரைக்க 1 1/2 கப் கெட்டியான மோர் ஊற்றி கலந்து விடுங்கள்.
மோர் ஊற்றினால் தான் புளித்த சுவை நமக்கு கிடைக்கும். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை ஊத்தப்பம் ஊற்றும் அளவிற்கு கரைத்து கொள்ளவும். இப்போது தோசைக் கல்லைஅடுப்பில் வையுங்கள். கல் காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றி கொஞ்சமாக விரித்து கொள்ளுங்கள்.
ஊத்தப்பம் குண்டாக தான் இருக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். கோதுமை மாவு வேக சிறிது நேரம் எடுக்கும். ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவு தான்… ருசியான கோதுமை ஊத்தப்பம் ரெடி.