பத்தே நிமிடத்தில் தயாராகும் செம ருசியான கடலைப்பருப்பு அல்வா!!!

18 February 2021, 8:43 am
Quick Share

வித்தியாசமான ரெசிபிகளை செய்து பார்ப்பதில் ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கும். அதிலும் மாலை நேர தின்பண்டங்களில் வித விதமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்புவார்கள். அப்படி ஒரு வித்தியாசமான ரெசிபி தான் கடலைப்பருப்பு அல்வா. இது ருசியாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இது ஆரோக்கியமானதும் கூட. இப்போது கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்

நெய் – 1/8 கப்

சர்க்கரை – 1/2 கப்

பால் – 1/2 கப் + 1 தேக்கரண்டி

குங்குமப்பூ – சிறிது

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

நறுக்கிய பாதாம் – 2 தேக்கரண்டி

செய்முறை:

*கடலைப்பருப்பு அல்வா செய்வதற்கு முதலில் கடலைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். 

*கடலைப்பருப்பு ஊறியதும் அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*குங்குமப் பூவை ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் ஊற வையுங்கள்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நாம் வைத்துள்ள நெய்யில் பாதியை கடாயில் ஊற்றி அதில் அரைத்து வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கிளறவும். கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

*கடலைப்பருப்பின் நிறம் சற்று மாறி, பச்சை வாசனை போனதும்  குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றவும். இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

*பருப்பு சாஃப்டாக வெந்த பின் சர்க்கரையை சேர்த்து கிளறுங்கள். 

*கலவை ஓரளவு கெட்டியாக மாறும்போது நாம் வைத்துள்ள மீதி நெய்யை ஊற்றி கிளறவும். 

*அல்வா கடாயில் ஒட்டாமல் வந்தபின் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். 

*ருசியான கடலைப்பருப்பு அல்வா இப்போது தயார்.

Views: - 39

0

0