இனி வீட்டிலே செய்யலாம் டேஸ்டான பிளாக் ஃபாரஸ்ட் கேக்!!!

19 August 2020, 5:00 pm
Quick Share

பொதுவாக கேக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் தற்போது எல்லா பேக்கரிகளிலும் விற்கப்படும் பிளாக் ஃபாரஸ்ட் கேக்கிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் இதனை கடைகளில் தான் வாங்கி உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டிலே சுகாதாரமான முறையில் பிளாக் ஃபாரஸ்ட் கேக் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…..

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 250 கிராம்

கோகோ பவுடர்- 3/4 கப்

பேக்கிங் பவுடர்- 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1 தேக்கரண்டி

சர்க்கரை- 3 கப்

பால்- 1 கப்

செரி பழம்- தேவையான அளவு

முட்டை- 3

வெண்ணிலா எசன்ஸ்- 2 தேக்கரண்டி

எண்ணெய்- 1/2 கப்

உப்பு- தேவையான அளவு

விப்பிங் கிரீம்- 3 கப்

செய்முறை:

ஒரு மிக்ஸிங் பவுலில் இரண்டு கப் மைதா மாவு, 3/4 கப் கோகோ பவுடர், இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/2 தேக்கரண்டி  உப்பை சலித்து சேர்த்து கொள்ளவும். இதனுடன் 2 கப் சர்க்கரை, ஒரு கப் பால், 1/2 கப் எண்ணெய் ஊற்றி கிளறி கொள்ளவும். 

எண்ணெய்க்கு பதிலாக பட்டர் கூட சேர்க்கலாம். மேலும் மூன்று முட்டை, இரண்டு தேக்கரண்டி  வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். வொயர் விஸ்க் அல்லது எலக்ட்ரிக் பீட்டர் வைத்து கலந்து கொள்ளவும். கலந்து வைத்த மாவை இரண்டு ஒன்பது இன்ச் பேக்கிங் பேனில் ஊற்றி வைக்கவும்.

ஓவனை 350° F ல் சூடு செய்து பேக்கிங் பேனை உள்ளே வைக்கவும். இந்த கேக் வேக முப்பதில் இருந்து முப்பத்து ஐந்து நிமிடங்கள் வரை ஆகும். கேக் வெந்ததும் பேக்கிங் பேனை வெளியே எடுத்து கேக்கை பேனில் இருந்து எடுங்கள். பிறகு அதனை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நம்மிடம் மொத்தம் நான்கு கேக் லேயர்கள் இருக்கும்.

இப்போது செரி சிரப்பில் 1/2 கப்பை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மீதம் இருக்கும் சிரப்பை செரி பழத்துடன் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். செரி சிரப் கிடைக்காதவர்கள் 1/2 கப் சர்க்கரையை 1/2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து சிரப் தயாரித்து கொள்ளலாம். நாம் அடுப்பில் வைத்த சிரப் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.

அடுத்து 3 கப் விப்பிங் கிரீமுடன் 1/2 கப் பவுடர் செய்த சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு பீக் வரும் வரை அடிக்கவும். கேக் செய்ய இப்போது எல்லாம் தயாராக உள்ளது. முதலில் ஒரு கேக் எடுத்து அதனை ஈரமாக்க செரி சிரப் சிறிதளவு ஊற்றவும். அடுத்து கிரீமை முழுவதுமாக தடவி செரி பழத்தை பரப்பி விடவும். 

அதன் மேல் இன்னொரு கேக் வைத்து கிரீம் தடவி செரியை பரப்பவும். மேலும் ஒரு கேக் வைத்து கிரீம் தடவுங்கள். இதனை அலங்கரிக்க மேலே சாக்லேட்டை தூவி விடவும். ஆங்காங்கே கிரீம் வைத்து செரி பழத்தை கொண்டு அலங்கரித்து விட்டால் கடையில் வாங்குவது போன்ற டேஸ்ட்டான பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.