ஆரோக்கியம் தரும் ருசியான ஸ்பிரிங் ரோல் உங்களுக்கு செய்யத் தெரியுமா???

22 August 2020, 5:33 pm
Quick Share

வெடிகுண்டு முருகேசன் திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் உணவு பரிமாறுபவரிடம் ஸ்பிரிங் ரோல் இருக்கா என்று கேட்பார். அது ஒரு அருமையான காமெடியாக இருந்தாலும் அவர் கேட்ட அந்த ஸ்பிரிங் ரோல் மிக ருசியான ஒரு ரெசிப்பி. அதை  தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 200 கிராம்

பெரிய வெங்காயம்- 1

கேரட்- 1

பீன்ஸ்- 4

குடை மிளகாய்- 1/4( பச்சை, மஞ்சள், சிவப்பு)

முட்டை கோஸ்- 1/4

இஞ்சி- 1 இன்ச்

பூண்டு- 2 பல்

சில்லி சாஸ்- 2 தேக்கரண்டி

சோயா சாஸ்- 1/2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- பொரிக்க & தாளிக்க

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஸ்பிரிங் ரோல் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் 200 கிராம் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். இதனோடு 1/2 தேக்கரண்டி  உப்பு, ஒரு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். 1/2 கப்பில் இருந்து 3/4 கப் வரை தண்ணீர் தேவைப்படலாம்.

பிசைந்த பிறகு மாவின் மேல் எண்ணெய் தடவி விட்டு ஒரு துணி போட்டு அரை மணி நேரம் மூடி வைத்து விடலாம். இப்போது ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய ஒரு இன்ச் அளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு கேரட், நான்கு பீன்ஸ், 1/4 பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடை மிளகாய்கள், 1/4 முட்டை கோஸ், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும். காய்கறிகளை நீட்டு வாக்கில் அரிந்து சேர்த்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இந்த காய்கறிகளோடு இரண்டு தேக்கரண்டி சில்லி சாஸ், 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து கொள்ளவும். சாஸ் இல்லாத பட்சத்தில் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். அடுத்ததாக ஊற வைத்த மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளலாம்.

உருட்டிய மாவை சிறு சிறு வட்டங்களாக விரித்து விடுங்கள். பிறகு ஒவ்வொரு விரித்த மாவின் மேலேயும் எண்ணெய் தடவி அதன் மேல் கொஞ்சமாக மைதா மாவையும் தடவி கொள்ளுங்கள். தடவிய பிறகு ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று அல்லது நான்கு வேண்டும் விரித்த மாவை அடுக்கவும்.

அடுக்கி விட்டு அதனை மிகவும் மெலிசாக விரித்துக் கொள்ளுங்கள். இப்போது தோசைக் கல்லை வைத்து மெலிசாக விரித்த மாவை சிறு சிறு முட்டை வரும் வரை முப்பது வினாடிகள் மட்டும் போட்டு எடுங்கள். போட்டு எடுத்த பிறகு தனி தனியாக எடுத்து விடலாம். எண்ணெய் மற்றும் மாவு தடவியதால் சுலபமாக பிரித்து எடுத்து விடலாம்.

ஸ்பிரிங் ரோலுக்கான ஷீட் ரெடி. இந்த ஷீட்டை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது சதுரமாக வெட்டியும் பயன்படுத்தலாம். ஒரு ஷீட்டை எடுத்து அதற்குள் காய்கறிகளை வைத்து ரோல் செய்து ஓரங்களில் மடித்து வரவும். கடைசியில் மடிக்கும் முன் மைதா மாவை தண்ணீரில் கலந்து தடவி மூடி வைத்துக் கொள்ளுங்கள். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் ரெடி பண்ணிய ஸ்பிரிங் ரோல்களை போட்டு எடுத்து விடலாம். அவ்வளவு தான். அருமையான ஸ்பிரிங் ரோல் தயார்.

Views: - 40

0

0