வித்தியாசமான ருசியில் செட்டிநாடு இறால் குழம்பு!!!

31 July 2020, 11:13 am
Quick Share

இறைச்சி உணவுகளை சமைப்பதில் செட்டிநாடு சமையலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி செட்டிநாடு இறால் குழம்பு. இது சூடான சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு அசத்தலாக இருக்கும். இந்த குழம்பை  எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மசாலா தயார் செய்ய:-

முழு தனியா- ஒரு தேக்கரண்டி

ஏலக்காய்- 4

பட்டை- சிறிய துண்டு

கிராம்பு- 4

மிளகு- 7

காய்ந்த மிளகாய்- 3

ஜாவித்ரி- சிறிய துண்டு

சோம்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- ஒரு தேக்கரண்டி

கசகசா- ஒரு தேக்கரண்டி

இறால் ஊற வைக்க:-

இறால்- 1/2 கிலோ

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

குழம்பு செய்ய:-

எண்ணெய்- 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்- 25

தக்காளி- 2

பச்சை மிளகாய்- 2

இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

தனியா தூள்-  ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை- 2 கொத்து

புளி கரைசல்- ஒரு தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

செட்டிநாடு இறால் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு மசாலா தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி முழு தனியா, 4 ஏலக்காய், ஒரு சிறிய துண்டு பட்டை, 4 கிராம்பு, 7 மிளகு, 3 காய்ந்த மிளகாய், சிறிய துண்டு ஜாவித்ரி, 1/2 தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து வாசனை வரும் வரை வதக்குங்கள். 

வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்போது 1/2 கிலோ இறாலை சுத்தம் செய்து அதனோடு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் இறாலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வையுங்கள். 

அடுத்து ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு போட்டு பொரிய விடவும். 25 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனோடு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து கொள்ளலாம்.

தக்காளி நன்றாக வதங்கியதும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், 1 1/2 தேக்கரண்டி அரைத்த மசாலா தூள், ஒரு தேக்கரண்டி கெட்டியான புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். 

குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிய பின் மூடி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கட்டும். பிறகு ஊற வைத்த இறால் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் மட்டும் கொதித்தால் போதும். கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து குழம்பை இறக்கி விடலாம். 

Leave a Reply